கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை வகுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

மே 01, 2020

குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயத்திட்டங்க்களை வலுப்படுத்துவதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதியின் விஷேட செயலநியுடன்  ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.  

வைரஸை ஒழிப்பதில் மக்கள் குழுக்களாக வாழும் பிரதேசங்கள் மற்றும் விசேட பிரிவினர் தொடர்பில் பொது முறைமையில் இருந்து விலகி திட்டமிடுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள்  இதன்போது சுட்டிக்காட்டினார். நிறுவனங்களை நடத்திச் செல்லும் போது அரசாங்கம் வழங்கியுள்ள பரிந்துரைகள் நடைமுறையாகின்றனவா என்பது குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், அனைத்து தரப்பினரும் அதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பரிசோதனை செய்வதற்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நாட்டில் உற்பத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் சுகாதார துறை அடைந்துள்ள முக்கிய வெற்றியாகும். அவ்வுற்பத்திகளை  மேம்படுத்துவதில் பாதிப்பு செலுத்தும் குறைபாடுகளை அறியத்தருமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்யும் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினர் பயன்படுத்தும் விசேட ஆடைத் தொகுதியின் நியமங்கள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும்  மருத்துவ ஆலோசகர்கள் உள்ளிட்ட ஜனாதிபதியின் கொரோனா ஒழிப்பு செயலணியின் உறுப்பினர்கள் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.