எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டு வர இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

ஜூன் 02, 2019

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (01) பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு இராணுவத்தை நாட்டுக்குள் கொண்டுவர வேண்டாம் என்றும் அவ்வாறு கொண்டு வருவதை தாம் எதிர்ப்பதாகவும் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக இன்றைய தினம் பத்திரிகைகளில் செய்தி வெளிடப்பட்டிருப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்தையும் நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் எந்தவொரு இடத்திலும் எவருடனும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சமுர்த்தி நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்காக இடம்பெற்ற இந்த நிகழ்வு ரஜரட்ட நவோதய விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

நாட்டின் குறைந்த வருமானம் பெறும் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றி, வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், சுமார் 14 இலட்சமாக இருக்கும் சமுர்த்திப் பயனாளிகளை 20 இலட்சமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வருடம் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

எப்போதும் பயனாளிகளாகவே இருக்காது சுயமாக எழுந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்கு கைகொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வறுமை அதிகரித்திருப்பதற்கான பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சில அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் திருட்டுக்களில் ஈடுபடுவதும், அரசாங்கத்திற்கு இலாபமீட்டித் தரும் அரச நிறுவனங்களில் இடம்பெறும் பாரிய ஊழல், மோசடிகளின் காரணமாக அந்நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் இயங்கி வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள நாட்டின் கடன் சுமையுமே நாட்டின் வறுமை நிலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாம் ஒரு தேசம் என்ற வகையில் சுதந்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை இடம்பெறும் ஊழல் மோசடிகளே காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மக்களை பிழையாக வழிநடத்தி சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் போலிப் பிரச்சாரங்கள் பற்றி கவலை அடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டில் குழப்பமான நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பது இந்த குறுகிய நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதிகளின் போலிப் பிரச்சாரங்களின் காரணத்தினாலேயாகும் என்றும் நாட்டுக்காக ஊடகங்களுக்கும் முக்கிய பொறுப்புள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இன்று தான் நாட்டுக்காக உலகை வெற்றி கொண்டுள்ளதுடன், அனைத்து உலகத் தலைவர்களினதும் ஆதரவு தமக்குக் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துள்ள நரேந்திர மோடி ஒரு வார காலத்திற்குள் தமது கோரிக்கையின் பேரில் இலங்கைக்கு வருகை தருவது பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் மிகவும் குறுகிய காலத்தில் அமைதியான சூழலொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்திருப்பது பற்றி தனது மகிழ்ச்சியை வெளியிடும் வகையிலாகும் என்றும் குறிப்பிட்டார்.

மாவட்டத்திலுள்ள 8,900 சமுர்த்தி பயனாளிகளுக்கு நன்மைகளை வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி அவர்களை ஆரம்பித்து வைத்தார்.

மர நடுகை திட்டத்தின் கீழ் மாவட்ட மக்களுக்கு மாங்கன்றுகளும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, தமன்கடுவ பிரதேச சபையின் தலைவர் பேமசிற முனசிங்க, நகரபிதா சானக சிதத் ரணசிங்க, மாவட்ட செயலாாளர் பண்டுக அபேவர்தன, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk