கோவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் 'இட்டுகம’ ஊடக பிரச்சாரம் இன்று ஆரம்பம்

மே 13, 2020

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதென ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி திரட்டும் முயற்சியான 'இட்டுகம' வுக்கு ஊடக பிரச்சாரத்தனை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே, 13) ஆரம்பமானது.

ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ.100 மில்லியன் ரூபாவுடன் தொடங்கப்பட்ட இந்த நிதியத்தின் முக்கிய குறிக்கோள், சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு, கொவிட்-19 யினால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதாகும்.

கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடக பிரச்சாரமான ‘இட்டுகம’வுக்கு தங்களது முழு ஆதரவினை வழங்குமாறுஅனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடமும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கோரிக்கை விடுத்தார்.

பாதுகாப்பு அமைச்சில் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் உரையாற்றிய மேஜர் ஜெனரல் குணரத்ன, போரின் போது ‘அப்பி வெனுவென் அப்பி’ திட்டத்திற்கு பரவலான விளம்பரம் அளிப்பதில் ஊடகங்களினால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பினை பாராட்டினார்.

“அப்பி வெனுவென் அப்பி’ விளம்பரம் முழு நாட்டிலும் மக்களை ஈர்த்தது. ஊடகங்கள் நாடு முழுவதும் செய்தியை கொண்டு சென்றன, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இராணுவத்தில் இணையச் செய்வதற்கு இது ஊக்கமளித்தது, ”என அவர் தெரிவித்தார்.

"கொவிட்-19 தொற்று நோயால் நாடு பெரும் சிரமத்திற்கு ஆளானது, இருந்த போதிலும், தற்போதைய தலைமைத்துவத்தின் தொலைநோக்கு மற்றும் தயார்நிலை ஆகியவை பாதுகாப்புப் படைகள், பொலிஸ், சுகாதார அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவியது" என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

"பல்வேறு அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இந்த நிதியத்திற்கு பெருமளவில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். எதிர்காலத்தில் எந்தவொரு இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த நிதியத்தை மேம்படுத்துவது ஒரு சேமிப்பாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

"நிதியத்திற்கு கூடுதல் பங்களிப்புகளைப் பெறுவதற்காக 'இ்ட்டுகம' விற்கான விளம்பரத் தொடர்களை நாம் தயார் செய்துள்ளோம். இதற்காக பாத்தியா, உமரியா, சந்துஷ் மற்றும் ட்ரையட் ஆகியோர் எமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர். இந்த ஊடக பிரச்சாரத்திற்கு அதிகபட்ச விளம்பரம் அளிப்பதன் மூலம் இந்த தேசிய முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களிடமும் அந்நிறுவனங்களின் தலைவர்களிடமும் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

தற்போதைய சுகாதார திறன்களில் உள்ள பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம் தொற்றுநோய்களுக்கான தேசிய தயார்நிலையை மேம்படுத்தும் முக்கியமான முதலீடுகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நிதியம், கொவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் முக்கியமான சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன் சுகாதார அவசரநிலைகளுக்கான இலங்கையின் நீண்டகால தயார்நிலையை மேம்படுத்தும்.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் வருகை தந்திருந்த ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு சார்பாக மேஜர் ஜெனரல் குணரத்ன நன்றி தெரிவித்தார்.