இந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி

பெப்ரவரி 22, 2019

2019ஆம் ஆண்டில் தென் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு 423 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் சாதகமான பெறுபேறுகளை இந்த வருட நடுப்பகுதியளவில் மக்களும் அரசாங்கமும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விரிவான செயற்திட்டங்களே அதற்கு காரணம் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (21) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிர்வாக கட்டிடத் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் தென் மாகாண செயற்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வறுமையால் துயரப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்து, அவர்களது உற்பத்திகளை பொருளாதார ரீதியில் அதிகரிப்பதே கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் உள்ளிட்ட மக்களை வறுமை நிலைக்கு இட்டுச் செல்லும் அனைத்து சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி, பலமான பொருளாதாரத்துடன் தன்னிச்சையாக முன்னேற்றமடைந்த ஒரு தேசத்தை உருவாக்குவதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நுண்கடன் தொடர்பிலும் எதிர்காலத்தில் அரசாங்கம் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் விசேட வாரமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய அதனூடாக நிகழ்ச்சித்திட்டங்களை துரிதமாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2019ஆம் ஆண்டில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தினை தென் மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக 428 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 1,113,345 மக்கள் தொகையைக் கொண்ட காலி மாவட்டத்தின் வறுமை நிலை 2.9% ஆகும். 851,337 மக்கள் தொகையைக் கொண்ட மாத்தறை மாவட்டத்தின் வறுமை நிலை 4.4% ஆகும். 646,493 மக்கள் தொகையைக் கொண்ட ஹம்பாந்தோடடை மாவட்டத்தின் வறுமை நிலை 1.2% ஆகும்.

வறுமையில் வாழும் இந்த மக்களை இலக்காகக்கொண்டு கிராமசக்தி வேலைத்திட்டங்களை இந்த ஆண்டு தென் மாகாணத்தில் முறையாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், வழங்கப்பட்டிருக்கும் அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் உரிய முறையில் அந்த மக்களுக்காக பயன்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் இதுவரை காலமும் தென் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வன விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட மாகாண மக்கள் முகங்கொடுக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.

அத்துடன் கிராமசக்தி சங்கத்தினால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளை கொள்வனவு செய்வது தொடர்பில் சுல்தானாகொட தெற்கு கிராமசக்தி சங்கத்திற்கும் ஜப்பானிய நிறுவனமொன்றிற்கும் இடையே ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, திலீப் வெதஆரச்சி, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர்களும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கிராமசக்தி சங்க பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திஸ்ஸமஹாராம பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராமசக்தி நிர்வாக கிராமமாகிய ஜுல்பல்கம கிராம செயலக பிரிவிற்கும் இன்று விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

குடிநீர் பிரச்சினை, வீதி அபிவிருத்தி, பாடசாலைகளுக்கான வசதிகளை பெற்றுக்கொடுத்தல், சுகாதார பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் காட்டு யானைகளின் பிரச்சினை உள்ளிட்ட பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், அப்பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதாகவும் தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் வாக்குறுதியளித்தார்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தோடு இணைந்தாக அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் 04 பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக முச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஜுல்பல்கம கிராம சேவகர் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக சிகரெட் விற்பனையிலிருந்து விலகியிருக்கும் 08 விற்பனை நிலையங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டு பத்திரங்களை வழங்கி வைத்தார்.

திஸ்ஸமஹாராம, காவன்திஸ்ஸபுர மகா வித்தியாலய மாணவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு பரிசிலொன்றும் வழக்கப்பட்டது.

நன்றி: pmdnews.lk