ஜனாதிபதி பேராயருடன் சந்திப்பு

ஏப்ரல் 23, 2019

இதுபோன்ற கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது என்று ஜனாதிபதி தெரிவிப்பு

இன்று (22) பிற்பகல் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்.

உயிர்த்த ஞாயிறு சமயக் கிரியைகளில் ஈடுபட்டிருந்த போது கிறிஸ்தவ பக்தர்கள் முகம்கொடுக்க நேர்ந்த இந்த துன்பியல் நிகழ்வு குறித்து இதன்போது பேராயரிடம் தனது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேராயருடன் கலந்துரையாடினார்.

எதிர்காலத்தில் நாட்டினுள் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பேராயர் உள்ளிட்ட அனைத்து மதகுருமார்கள் மற்றும் தேவாலயங்களுக்கு பாதுகாப்பை கோரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தான் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நன்றி: pmdnews.lk