அநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு…

மார்ச் 22, 2019

சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04 வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களினால் நாடு முழுவதிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எவர் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் கடந்த 04 வருட காலத்தில் நாட்டினுள் மக்களுக்கான சேவைகள் வலுவடைந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அப்பாவி மக்களுக்காக அந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக நிதியத்தின் 437 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (20) திறந்துவைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் எந்தவித நிதியையும் செலவிடாமல் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியத்தின் பூரண நிதி ஒதுக்கீட்டினால் இந்த சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையமாகும். இதன் முதலாவது நிலையத்தை கண்டியில் அண்மையில் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதன் வளாகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.

“மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியை ஜனாதிபதி அவர்கள் பதிவு செய்தார்.

மிகிந்தலை பொது நிர்வாக அமைச்சிற்கு சொந்தமான விடுதியில் தாபிக்கப்பட்டுள்ள 601ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதியை தொலைத்தொடர் தொழிநுட்பத்தினூடாக ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

குறைந்த வருமானம் பெறும் 2,000 குடும்பங்களுக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக ஐந்து பேருக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்குதல், 200 சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தத்தின் சக்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகளை வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாகவும் வட மத்திய மாகாணத்தின் சிறுநீரக நோயாளர் உள்ளிட்ட ஏனைய நோயாளிகளின் பாவனைக்கு இரத்த அழுத்தத்தை கணக்கிடும் 200 கருவிகளை வட மத்திய மாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

சிறுநீரக நோய்த்தடுப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற ஐந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், அநுராதபுர “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக அர்ப்பணிப்பை வழங்கிய அதிகாரிகளைப் பாராட்டி நினைவுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் தனது பிரசார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியம் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவிகளின் மூலம் பலமான நிதியமாக மாறியுள்ளது. குறித்த நிதியத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி சிறுநீரக நோயாளிகளின் நலன்பேணல்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்குரிய ஆராய்ச்சிகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

800 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட செலவில் சிறுநீரக நோய் பரவியுள்ள பிரதேசங்களில் தற்போது சுமார் 600 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இசுறுமுனிய ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600ஆவது நீர் சுத்திகரிப்புத் தொகுதியும் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இன்று முற்பகல் இசுறுமுனிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து விகாரையின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதியை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

வாரியபொல ஸ்ரீ சுமங்கல விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய துமுல்லே சீலகந்த நாயக்க தேரர், தந்திரிமலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தந்திரிமலே சந்திர ரத்தன நாயக்க தேரர், இசுறு முனிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய மதவ சுமங்கல நாயக்கர் தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் நாட்டுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் ஆசி வேண்டி இதன்போது பிரித்பாராயணம் செய்தனர்.

இசுறு முனிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய மதவ சுமங்கல நாயக்க தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பீ.ஹரிசன், சந்திராணி பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இராணுவ தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk