பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி்

ஆகஸ்ட் 05, 2019

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

“போதைப்பொருள் ஒழிப்பு” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (02) பிற்பகல் குருணாகலை சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கெதிராக உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது அவர்களது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அல்லது தமது ஆட்சி அதிகாரத்திற்கு இந்த கடத்தல்காரர்களினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்திருப்பதன் காரணத்தினாலாகும் என்றும் இதனை அறிந்துதான் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தான் ஆரம்பித்திருப்பதாகவும் எந்த தடைகள் வந்தாலும் தனது இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை அதைரியப்படுத்தும் நோக்குடன் தனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைத்து வருவது அரசியல்வாதிகளினால் பலம்பெற்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களே என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களின் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டை உருவாக்கும் எண்ணக்கருவிற்கேற்ப போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி போதைப்பொருளுக்கு எதிரான எதிர்கால தலைமுறையொன்றை உருவாக்கும் நோக்குடன் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனுடன் இணைந்ததாக வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்னவின் வழிகாட்டலில் போதையிலிருந்து விடுபடுவோம் என்ற கருப்பொருளின் கீழ் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பாடசாலை, வட்டார மற்றும் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் கவிதை, சிறுகதை, சித்திரம், உரையாடல், குறு நாடகம், குறுந் திரைப்படம் ஆகிய ஒன்பது துறைகளில் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற 1036 மாணவ, மாணவியருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.நாவின்ன, சாந்த பண்டார, முன்னாள் மாகாண அமைச்சர்களான அத்துல விஜேசிங்க, தர்மசிறி தசநாயக்க, சம்பிக்க ராமநாயக்க ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk