வெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஆகஸ்ட் 21, 2019

வெடிபொருட்களை விநியோகிக்கும்போது இடம்பெறும் முறைகேடுகளை குறைத்து உரிய முறையில் வெடிபொருட்களை விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அனுமதி பத்திரம் பெறாத கற் சுரங்கங்கள் மற்றும் மீன் பிடிப்பதற்கு வெடிபொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் பாரிய சூழல் பாதிப்புகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய முறைகேடுகளை தவிர்க்கும் முகமாக வெடிபொருட்களை விநியோகிக்கும் முறைகள் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிபொருட்களை விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென குறித்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்

வெடிபொருட்கள் விநியோகம் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள் முறையான ஒருங்கிணைப்பை பேண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், உத்தேச புதிய முறைமைகளை வடிவமைக்கும்போது குறித்த நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் வெடிபொருட்கள் தொடர்பிலான பிரதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

நன்றி: pmdnews.lk