ஜப்பானிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ஜப்பான் பயணம்

ஒக்டோபர் 21, 2019

ஜப்பானிய பேரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (21) முற்பகல் ஜப்பான் பயணமானார்.

ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் ஜப்பானுக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பல உலகத் தலைவர்கள் பங்குபற்றும் இவ்விழா நாளை பிற்பகல் டோக்கியோ நகரில் உள்ள இம்பீரியல் அரச மாளிகையில் இடம்பெறவுள்ளது. விழாவை தொடர்ந்து இடம்பெறவுள்ள புதிய பேரரசர், அரச தலைவர்களுக்கான விருந்துபசார நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் நாட்டின் பேரரசராக உள்ள அகிஹித்தோ பேரரசர் முப்பது வருடங்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் தனது பதவியிலிருந்து விலகிக்கொண்டார். 1817ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறு தனது பதவியை விட்டு விலகிய முதலாவது ஜப்பானிய பேரரசராக இவர் உள்ளார். 2019 மே மாதம் 01ஆம் திகதி முடிக்குரிய இளவரசரான நருஹிதோ ஜப்பானின் 126வது பேரரசராக நியமிக்கப்பட்டார்.

நன்றி: pmdnews.lk