புதிய ஜப்பானிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஒக்டோபர் 24, 2019

ஜப்பான் நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழா 180 க்கும் மேற்பட்ட நாடுகளின்  அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (22) டோக்கியோ நகரின் இம்பீரியல் மாளிகையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், பிரித்தானிய இளவரசர், பெல்ஜியத்தின் பிலிப் இளவரசர், சுவீடன் நாட்டு மன்னர், கட்டாரின் அமீர் உள்ளிட்ட விசேட அதிதிகளும் 2,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நருஹிதோ பேரரசர் மசாக்கோ பேரரசியுடன் அரச உடை அணிந்து இம்பீரியல் மாளிகையின் தலைமை அவைக்கு வருகைதந்ததைத் தொடர்ந்து விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஜப்பான் பேரரசராக ஆட்சி புரிந்த அகிஹிதோ பேரரசர் 30 வருடங்களுக்கு பின் கடந்த மே மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார். 1817இன் பின் பதவியை இராஜினாமா செய்த முதல் ஜப்பானிய பேரரசர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019 மே மாதம் 01ஆம் திகதி முடிக்குரிய இளவரசரான நருஹிதோ ஜப்பானின் 126 ஆவது பேரரசராக நியமிக்கப்பட்டார்.

இன்று டோக்கியோ நகரில் அமைந்துள்ள அரச மாளிகையில் இடம்பெற்ற விழாவினை தொடர்ந்து நருஹிதோ பேரரசர் மற்றும் அவரது மனைவியாகிய மசாக்கோ பேரரசி ஆகிய இருவரும் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்றுள்ளார்கள் என உலகிற்கு அறிவிக்கப்பட்டது.

முடிசூட்டு விழாவை தொடர்ந்து புதிய பேரரசரால் அரச தலைவர்களுக்கு விசேட விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நன்றி: pmdnews.lk