சமாதானம், ஐக்கியம், சகவாழ்வுக்கான தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில்

ஆகஸ்ட் 01, 2019

ஏப்ரல் 21ஆம் திகதிய சம்பவங்களினால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நேற்று (30) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களினால் இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் அடிப்படைவாதத்தை தோல்வியுறச் செய்து எதிர்கால தலைமுறைக்காக நாட்டில் சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களுடன் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம், சந்தேகம் மற்றும் நம்பிக்கையீனங்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதைப்போன்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பயங்கரவாதத்திற்கு நாட்டில் எங்குமே இடமளிக்கப்போவதில்லை என்றும் அதை ஒழிப்பதற்காக அரச அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேநேரம் நாட்டின் தேசிய ஐக்கியத்திற்காக அனைத்து சமயத் தலைவர்களினதும் வழிகாட்டலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்துக்கு வர வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் மக்கள் மத்தியில் அச்சம், சந்தேகம், நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்தும் அனைவரும் விலகியிருக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.

அனைத்து சமயத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த தேசிய மாநாடு இடம்பெற்றது.

இலங்கையில் சமயங்களுக்கும் இனங்களுக்கும் மத்தியில் சமாதானம், சகவாழ்வு, சகிப்புத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்த்தல், பல்வேறு சமய பிரிவுகளுக்கு மத்தியில் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் வாழும் செய்தியை உலக மக்களுக்கு வழங்குவதும் நாட்டில் அனைத்து சமூக மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதும் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாகும்.

சமயத் தலைவர்கள், முன்னணி அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன், உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளரும் சர்வதேச சங்கத்தின் தலைவருமான கலாநிதி முஹம்மட் பின் அப்துல்லாஹ் கரீம் அலீஷா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk