--> -->

இராணுவம் மற்றும் பொலிஸார் தங்கள் தொழில்முறை மற்றும் நிபுணத்துவத்தை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதன் மூலம் நிரூபித்துள்ளனர் - பாதுகாப்பு செயலாளர்

ஏப்ரல் 17, 2020

முப்படை மற்றும் பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களது நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை விருத்தி என்பவற்றை நிரூபித்துள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வீதித் தடைகளை ஏற்படுத்துவது முதல் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பினை பேணியோரை கண்காணித்தல் மற்றும் தடமறிதல், தனிமைப்படுத்தல் வசதிகளை நிறுவுதல், வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வினியோகித்தல், கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நாட்டில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் உங்களது திறன்களை வெளிக்காட்டியுள்ளீர்கள் என அவர் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள படையினர் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு படை தலைமைகளுக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர், அங்குள்ள முப்படையினர் மற்றும் பொலிஸாரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிங்கள தமிழ் புதுவருட நல்வாழ்த்துக்களையும் எத்திவைத்தார்.

சுகாதார அபாயங்கள் கண் முன்னே நின்றபோதும் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு திட்டங்களுக்கு ஒத்துழைத்த இராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், கடற்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட தன்னலமற்ற முயற்சிகளை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

"இந்த பண்டிகை காலங்களில் உங்கள் குடும்பங்களை துறந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தமைக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் இதயபூர்வமாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ”என அவர் மேலும் தெரிவித்தார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் இந்த திட்டத்தின் போது நாட்டின் புலனாய்வு அமைப்புகளினால் அளிக்கப்பட்ட பங்களிப்பினை பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், முந்தைய நிர்வாகத்தின் கீழ் அவைகள் ஓரங்கட்டப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, கீழிறக்கப்பட்டன, ஆனால் அவற்றை திறம்பட பயன்படுத்த முழு புலனாய்வு அமைப்பும் இந்த அரசாங்கத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டன என தெரிவித்தார்.

"இன்று, புலனாய்வு அமைப்புகள், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர்களை கண்டுபிடித்தது அவர்களின் நடமாட்டங்கள் தொடர்பாக தகவல்களை சம்பந்தபட்ட துறையினருக்கு அளித்ததன் மூலம் இந்த வைரஸ் பரவலை தடுக்கும் செயல்திட்டத்தில் காத்திரமான பங்காற்றினர் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்து செயற்பட்ட சுகாதாரத் துறையினரின் குறிப்பாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்களிப்பை அவர் பெரிதும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், யாழ் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய, யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.