--> -->

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

ஏப்ரல் 18, 2020
  • சுகாதார அபாயங்கள் காணப்பட்டபோதும் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ, கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரின் தன்னலமற்ற நடவடிக்கைகள் என்றுமே பாராட்டுக்குரியவையாகும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு படை தலைமையகங்களுக்கும் திருகோணமலையின் 22 ஆவது பிரிவுக்கும் விஜயம் ஒன்றினை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னணியில் இருந்து போராடும் படையினரின் தன்னலமற்ற செயற்பாடுகள் தொடர்பாக பாராட்டி உரை நிகழ்த்தினார்.
 
தனது விஜயத்தின் போது முப்படை, விசேட அதிரடிப்படை வீரர்களையும் பொலிஸாரையும் சந்தித்து கலந்துரையாடிய பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் எத்தி வைத்தார்.
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்தபோது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸுடன் வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய, வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிறி முனசிங்க, வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி, அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தா முனசிங்க, கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னனாடோ, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெயந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார் லியனகே, முல்லைத்தீவு பாதுகாப்பு படை தளபதி தீப்தி ஜெயதிலக மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி. ஹக்மன ஆகியோர் வரவேற்றனர்.