--> -->

நாளந்த கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் பாதுகாப்பு செயலாளர் கௌரவிப்பு

ஜனவரி 24, 2019

பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை கௌரவிக்கும் வகையில் கொழும்பு நாளந்த கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் திங்களன்று (ஜனவரி, 21) ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களை நாளந்த கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ரணவிரு அமைப்பின் தலைவர், விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து, செயலாளர் அவர்கள் கல்லூரியின் போர் வீரர்கள் நினைவுத்தூபியை பார்வையிட்டதுடன், அதற்கு மலர்வளையம் சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. பின்னர் கல்லூரியின் கேடட் மாணவ சிப்பாய்களினால் கௌரவ அணிவகுப்பு மரியாதையொன்றும் அவருக்கு அளிக்கப்பட்டது.

நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான இப்பாடசாலையின் பழைய மாணவரான பாதுகாப்புச் செயலாளர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களான சேவையில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், முப்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், தமது பாடசாலைக் காலத்தில் இடம்பெற்ற பசுமையான நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததுடன், இளைய தலைமுறையினருக்கு பாடசாலையில் வழங்கப்பட்ட அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய சிறந்த கல்வி சேவையினையும் நினைவுகூறினார். அத்துடன், நாட்டில் சமாதான யுகத்தினை தோற்றுவிப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்த யுத்த வீரர்களுக்காக தமது கௌரவத்தினையும் நன்றியையும் நல்கினார்.

மேலும் அவர், பாடசாலை நாட்களில் பாட விதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஊக்கவிப்பு வழங்கிய தமது ஆசிரியர்களின் அளப்பரிய சேவையை நினைவுகூர்ந்ததுடன், அத்தகைய ஒரு முழுமையான கல்வி, மாணவர்களை நம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளவும் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறவும் உதவியதாக குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலைகளில் மாணவர்கள் கல்வி பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேவேளை, பாடசாலையில் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், நாட்டிற்கு அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் சேவையாற்றுவதற்கு முன்வருமாறு பாடசாலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இவ்விழாவில் பாதுகாப்பு செயலாளர் அவர்களை பாராட்டுமுகமாக நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவின் பின்னர் பாடசாலை வளாகத்தின் சில பகுதிகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்க உறுப்பினர்கள், அதிபர், கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.