--> -->

கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீதுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

மே 12, 2020

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கிறது.     

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பில் இலங்கை கடற்படையின் முதலாவது கடற்படை வீரர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அடையாளங் காணப்பட்டதிலிருந்து வெலிசர கடற்படை தளத்தில் கடையாற்றிய அனைத்து கடற்படை வீரர்களையும் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் கடற்படை தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது.    

இலங்கை கடற்படைக்குள் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான உண்மை நிலைமையை கடற்படை மூடிமறைப்பதாக சில இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். இலங்கை கடற்படை உள்ளிட்ட முப்படை வீரர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனை தொடர்பான தகவல்களை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்தார்.    

கடற்படைவீரர்களுடன் தொடர்பைப் பேணியோர்களை கண்டறியும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.  இவர்களில் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்படுபவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.    

எவ்வாறாயினும், வெலிசர கடற்படை தள வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாம் நபர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பபா பலிஹவதன, சுகாதார அமைச்சின் தொற்று நோய்களுக்கான வைத்திய நிபுணர் டாக்டர் திலங்க பதிரன மற்றும் கம்பஹா பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளைக்கு அமைய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டது.     

இலங்கை கடற்படை, கம்பஹா பிராந்திய சுகாதாரபணிப்பாளர் பணிமனையின் மருத்துவ ஆலோசனைகளை கோரியுள்ள அதேவேளை, அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கடற்படை தளத்தில் தங்கியிருந்து பணிகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.    

நாடளாவிய ரீதியில் கடற்படை வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றும் தொற்றுக்குள்ளாகாத கடற்படை வீரர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கொரோனா வைரஸ் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுக்கு இலங்கை கடற்படையினரால் சமர்ப்பிக்கப்படுகின்றன.     

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படைவீரர்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனை செயல்முறை தொடர்பாக சுகாதார மற்றும் பொறுப்பான ஏனைய அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணி தேவையான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.     

இலங்கை கடற்படையானது ஒரு பொறுப்புவாய்ந்த அரச நிறுவனம் என்ற வகையில்  கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அரசாங்க பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அந்த அடிப்படையில் கொரானா வைரஸினால் பாதிக்கப்படும் மற்றும் பரிசோதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பிலான சகல தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக அலுவலகம், மாவட்ட பொது சுகாதார சேவைகள் அலுவலகம் மற்றும் ஏனைய பொறுப்பான அரசஅலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சமர்பிக்க கடமைப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.    

நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு  இலங்கை கடற்படையினார் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, எனவே, இலங்கை கடற்படை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான எந்த தகவலையும் மறைக்காது என சுட்டிக்காண்பித்தார்.

 

Alternative text - include a link to the PDF!