--> -->

அனர்த்தங்களை முற்கூட்டியே அடையாளம் காணும் முறைமை விரைவில் செயல்படுத்தப்படும்- பாதுகாப்பு செயலாளர்

ஆகஸ்ட் 26, 2020

மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேரனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாரஹன்பிட்டவில் உள்ள இராஜாங்க அமைச்சில் இன்று உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமைகளை ஏற்றுக்கொண்ட அவர், பாதுகாப்பு, இராணுவம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் என்பன ஒன்றாக ஒருங்கிணையும்போதே மக்கள் வாழ ஒரு அமைதியான சூழலை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' எனும் தூரநோக்கு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஆற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் அவற்றினை அடைவதற்கு ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டிய கடப்பாடு காணப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் பெருமை மிகுந்த இராணுவ வீரராக மிளிர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பிலும் 35 ஆண்டுகால அனுபவமுள்ள ஒரு சிறந்த இராணுவ வரலாற்றைக் கொண்டுள்ளார். அவர் 2016ம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனியார் துறை நிறுவனங்களில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் அவர், 2012 முதல் 2015 வரை பிரேசில் நாட்டின் துணைத் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் சரத் வீரசேகர, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ், இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவு தலைவி சுஜீவா நெல்சன் மற்றும் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.