தனிப்பட்ட விழாக்களுக்கு தன்னை அழைப்பதனைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள்

செப்டம்பர் 01, 2020

  • தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கே தனக்கு உள்ள நேரம் போதுமானதாக உள்ளதாக தெரிவிப்பு

தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கே தனக்கான நேரம் போதுமானதாக இருப்பதன் காரணமாக திருமணங்கள், விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தனக்கு அழைப்பு விடுப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் அடிமட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற எனது அன்றாட அதிகாரபூர்வ பணிகளுக்கே தனக்கு உள்ள நேரம் போதுமானதாக உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதற்கு மேலதிகமாக திருமணங்கள், விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு நேரத்தை ஒதுக்குவது தனக்கு சிரமமாக இருக்கும் என்பதால் அத்தகைய நிகழ்வுகளுக்காக தனக்கு அழைப்பு விடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து அன்புள்ளங்களிடமும் உரிமையுடனும் மரியாதையுடனும் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன் மீதான அன்பு மற்றும் மதிப்பின் காரணமாக அதிகளவானோர் தமது வாழ்வின் முக்கிய சந்தர்ப்பங்களில் என்னை கலந்துகொள்ளுமாறு எனக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிகாரபூர்வ கடமைகளுக்குப் புறம்பாக, தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சொற்ப நேரத்தையும் கூட மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிடுவதற்காக தான் விரும்புவதை தயவுசெய்து அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என பணிவோடு வேண்டிக்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.