--> -->

30 வருட கால யுத்த வெற்றியின் அபிமானத்தை எதிர்கால தலைமுறையினரும் உலகத்தினரும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

மே 23, 2019

இராணுவ வீரர்களின் போர்த்திறமை, தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு விழாவின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போர்க் களத்தில் போராடிய இராணுவ வீரன் முதல் கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி வரையிலான அனைவரினதும் அனுபவங்கள், வாழ்க்கை முறை மற்றும் போர்த்திறமை ஆகியன பாராட்டுக்குரியவை என்றும் இன்றும் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது கடந்தகால அனுபவங்களை கௌரவத்தோடு நினைவுகூர்ந்து வருவதுடன், தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய விபரங்களை அவர்களோடு அழிவதற்கு உரிய தரப்பினர் இடமளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அத்தகைய நூலொன்றினை வெளியிடுவதன் ஊடாக 30 ஆண்டு கால யுத்தத்தில் உயிர்தியாகம் செய்த சகல இராணுவ வீரர்களுக்கும் செலுத்தப்படும் மரியாதையாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாறாக “உத்தமாச்சாரய” எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. தனது உயிரை துச்சமாக மதித்து தனது சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் படையணியின் குறிக்கோளினை வெற்றிகொள்வதற்காகவும் தன்னிச்சையாக முன்வந்து, எதிரிகளுடன் போராடி வீர தீர செயல்களைப் புரிந்த இராணுவ வீரர்கள் பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிய படையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமிக்க பதக்கம் இதுவாகும் என்பதுடன், இதுவரையில் இலங்கையின் 11 இராணுவ அதிகாரிகளுக்கும் ஏனைய பதவி நிலைகளிலுள்ள 19 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் நினைவுகூரப்படும் சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்ததாக இலங்கை இராணுவத்தினரின் பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் வீர தீர செயல்களை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் “உத்தமாச்சாரய” (வணக்கம்) என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் நூல்களை வழங்கி வைத்தார்.

சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் மஹரகம அபேட்சா மருத்துவமனைக்கு வழங்கப்படும் 70 மில்லியன் ரூபாவுக்கான காசோலையினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்தாக தாய்நாட்டுக்கு சிறப்பான சேவை ஆற்றிய பிரிகேடியர் பதவிகளை வகித்த 10 அதிகாரிகளை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்துவதற்கும் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நன்றி: pmdnews.lk