வீதி ஒழுங்கை சட்டத்தினை அமுல்படுத்த விமானப்படையின் ட்ரோன் கருவிகள் பொலிஸாருக்கு உதவி

செப்டம்பர் 16, 2020

கொழும்பு புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் முதல் (15) அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ராஜகிரிய, நுகேகொடை, பொரல்லை, காலி வீதி ஆகிய பிரதான வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமுல்படுத்தப்பட உள்ள வீதி ஒழுங்கை திட்டம் தொடர்பாக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் மூன்று நாட்களை கொண்ட பரீட்சார்த்த நிகழ்வு இன்றைய தினம்  நிறைவு பெறவுள்ளது.

பஸ் முன்னுரிமை பாதைகளை ஒதுக்குவதன் மூலம் கொழும்பு நகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முன்னதாகவே தொடங்கப்படவிருந்த இந்த திட்டம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டிருந்தாகவும் அந்தத் திட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்குள் வினைத்திறன் மிக்க  போக்குவரத்து முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக பொலிஸாருடன் இணைந்து ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் பஸ் முன்னுரிமை ஒழுங்கையை இன்று முதல் (16) பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து ஒழுங்கை விதிகளை மீறுவோருக்கு எதிராக நாளை முதல் தண்டப் பணம் அறவிடப்படும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.