--> -->

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது – ஜனாதிபதி

மே 20, 2019

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய ஆற்றல் எமது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக முப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும்” பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

தாய் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் நாட்டின் ஆட்புல எல்லையை பாதுகாப்பதற்காகவும் உயிர்த் தியாகம் செய்த, காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரை நினைவுகூர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ நினைவுத் தூபி முன்னிலையில் நினைவு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.

முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த வெற்றியை அடைந்து பத்து வருடங்கள் நிறைவுபெறும் இந்த சந்தர்ப்பத்தில், அதற்கு முற்றிலும் வேறுபட்ட சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிர்பாராத வகையில் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்நாட்டு முப்படையினர், புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடந்த முப்பது ஆண்டு கால யுத்த அனுபவங்களை பயன்படுத்தி புதிய பயங்கரவாத சவாலை நிச்சயமாக வெற்றிக்கொள்வதற்கான ஆற்றல் அனைவருக்கும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தனது கௌரவத்தை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மனைவிமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு தற்போது கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களால் தாய் நாட்டுக்காக ஆற்றும் சிறப்பான சேவையையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் முப்படை தளபதிகள், பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், தேசிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜன்மிக்க லியனகே மற்றும் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk