--> -->

கொரோனா வைரஸ் நிலைமைகள்; 9,974 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

ஒக்டோபர் 15, 2020

நேற்றைய தினம்  வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,038 பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 348,909 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மாத்திரம் 9,974 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு,  படையினரால் நிர்வாகிக்கப்படும் 88 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,703 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை  தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 52,612 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.    

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில் வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் சிகிச்சையின் பின் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.