--> -->

மொத்தம் 9,189 பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

ஒக்டோபர் 26, 2020

புதிதாக தொற்றுக்கு உள்ளான மேலும் 351 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,872 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொரோனா  கொத்தணியில் 4,400 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் என  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் செயற்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, 8,421 பேர்  இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்து 836 பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில்  நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 9, 189 பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றய தினம்  ஒரு நோயாளி  உயிரிழந்ததால் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கைகள்  உறுதிப்படுத்தியுள்ளன.


உயிரிழந்த நோயாளி  குருதி நோய்த்தொற்று நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு 02  பகுதியில் வசிக்கும் 70 வயதுடைய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.