--> -->

63 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

நவம்பர் 05, 2020

வெற்றிலைக்கேணி கடற் பிரதேசத்தில் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 63 மில்லியன் ரூபா பெறுமதியான 213 கிலோ கிராம்  கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிராந்திய கடற்படை கட்டளையகத்தினால் வெற்றிலைக்கேணி கடல் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது  சந்தேகத்துக்கிடமான முறையில் பயணம் செய்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது எட்டு பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 98 பொதிகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெற்றிலைக்கேணி, உடுத்துறை மற்றும் அரியாலை பிரதேசங்களில் வசிக்கும் 36 முதல் 46 வயது வரை உடையவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவினையும் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil