அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நிறைவு

டிசம்பர் 17, 2020

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நேற்றைய தினம் நிறைவுற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின்  செயலாளருமான  மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

அனர்த்த முகாமைத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள  உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் டிசம்பர் 14 அன்று ஆரம்பமான கருத்தரங்கில் இணைய மூலம் பங்குபற்றினர் .

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை மற்றும் சர்வதேச அனர்த்த மீட்பு மையம், ஐக்கிய இராச்சியத்தின் ஹடேர்ஸ்பீல்ட் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பல பங்குதாரர் பல்கலைக்கழகங்கள், ஐ.நா. முகவர் நிலையத்தின் பங்குதாரர்கள் , ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஆசிய தயார்நிலை கூட்டாண்மை மற்றும் ஏனைய பங்காளி முகவர்களுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு  இந்த கருத்தரங்கினை  நடாத்தியது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அனைத்து பண்குதாரகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொழும்பு பிரகடனம், பங்குதாரர்களிடையே விநியோகிக்கப்பட்டது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் பரிசுகளை வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்வின் போது, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்கவினால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிறைவு விழாவில், முப் படை மற்றும் பொலிஸ் மற்றும் இதர பங்குதார அமைப்புகளையும் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.