பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மே 05, 2019

கடந்த 48 மணித்தியாலங்களின்போது, படையினர் அவர்களின் முழுக்கவனத்தையும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் அனைத்து பாடசாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பாதுகாப்பு நிலைமைகளை முழுமையாக சோதனை செய்து அவற்றுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்பாதுகாப்பு நடவடிக்கையானது, பொதுமக்களிடம் உள்ள அச்ச நிலைமையை போக்கி பாதுகாப்பு நிலைமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும்வரை தொடர உள்ளதாகவும், இராணுவத்தினர் அல்லது பொலிசாருக்கு இவ் விடயம் தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் தெரியப்படுத்துவதை வரவேற்பதாகவும் கொள்ளுப்பிட்டிவில் நேற்று (மே, 05) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது இராணுவ ஊடகப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களின் ஊடக ஆதாரங்கள் இன்றி பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும் நிறுவனங்களை நம்பி இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே படையினரின் பிரதான நோக்கமாகும் எனவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முறியடித்து இலங்கை தேசத்தை பாதுகாத்தவர்கள் என்றவகையில் அவர்கள்மீது நம்பிக்கை வைக்கும்படி தெரிவித்த அவர், நாம் நம்மை பலவீனப்படுத்தக்கூடாது, ஆனால் ஒரே நாடு என்ற வகையில் நாம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். சகல பயங்கரவாதிகளையும் கைது செய்வதற்காக நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கடற்படையினரால் களுத்துறை வடக்கு புகையிரத நிலைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இராணுவத்தினர் மற்றும் விமானபடையினர் அணியும் சீருடையை ஒத்த ஏழு உருமறைப்பு இராணுவ சீருடையை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, திருகோணமலையில் இடம்பெற்ற மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின்போது சர்வதேச தீவிரவாத குழுக்களுடனான தொடர்புகளை காண்பிக்கும் காணொளிகளுடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி மாவட்டத்திலும் இவ்வாறு காணொளிகளை வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடற்படையினர் முழுமையாக செயற்பட்டுவருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார அவர்கள் கின்றனர்.

இதேவேளை, விமானப்படையினர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் 21 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் மூன்று பிரிவுகளும் ஒரு உப பிரிவும் விமானப்படையின் பொறுப்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களின் சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த இப்பாடசாலைகளில் மேலதிக சோதனை நடவடிக்கைகளுக்காக விமானப்படையினர் அங்கு நிலைகொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன அவர்கள் ஊடக கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள பல பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் தக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வெளியான கடிதம் பொலிசாருக்கு கிடைக்கபெற்றதன் பிரகாரம் அவற்றில் எவ்வித நம்பத்தகுந்த தகவல்களும் இல்லாததால் இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ் பி ருவன் குணசேகர அவர்கள் ஊடக கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பின் அனைத்து பாடசாலைகள் உட்பட நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஞாயித்துக்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டொன்றின் மூலம் இலங்கையிலிருந்து டுபாய்க்கு சென்ற மாக்கந்துர மதூஷ் டுபாயில் இருந்து நேற்று காலை (மே, 05) நாடு கடத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் ஆகிய பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான சமரசிங்க ஆராய்ச்சிலாகே மதூஷ் லக்சித அல்லது மாகந்துரே மதூஷ், கொழும்பு குற்றப்புனாய்வுத் திணைக்களத்திடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.