--> -->

இன்று பாடசாலை வளாகத்தை சுற்றி விஷேட சோதனை நடவடிக்கைகள்

மே 04, 2019

நாளை திங்கட்கிழமையன்று நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்கனேவே வழங்கப்பட்டுள்ளன. இவ்விஷேட பாதுகாப்பு ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு மேலாக, ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் பாடசாலை வாரியாக விழிப்புணர்வு மேற்கொள்ளும் குழுக்களை உருவாக்கும்வகையில் பாடசாலை நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் மேலதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இன்று கொழும்பபின் சுற்றுப்புறச்சூழலிலுள்ள பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தேவையற்ற சிரமங்கள் அல்லது தவறான விளக்கங்களிளிருந்தும் தவிந்துகொள்ளும் வகையில் இது தொடர்பான முன் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பில் இன்று மதியம் 1.00 மணிக்கு பின்னர் பாடசாலைகளின் அருகே தமது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மோட்டார் வாகனத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், பாடசாலை பஸ்கள், வேன்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் ஏனைய வாகனங்களுக்கு விஷேட வாகனத்தரிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான 56 சடலங்களின் உடல் பாகங்கள் கொழும்பிலுள்ள நீதித்துறை மருத்துவ அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உறவினர்கள் எவராவது காணாமல் போயிருந்தால் அல்லது குறித்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்திருந்தால் இது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாரு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் உடல் பாகங்கள் தெரிந்து கொள்வதற்காக டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் வசமுள்ள வாள்கள் மற்றும் கிறிஸ் கத்திகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அண்மையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது இவ்வாறான பெரும் தொகையான ஆயுதங்கள் நாட்டின் பல பாகங்களிலும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வசமுள்ள இவ்வாறான ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சனி மற்றும் ஞாயிறு (04 & 05) ஒப்படைக்கலாம். அத்துடன் இதேதினங்களில் முப்படையினர் அல்லது பொலிஸார் அணியும் சீருடையை ஒத்த இராணுவ சீருடையை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடியும்.

மேலும், சமூக வலைத்தளங்களின் ஊடக பொய்யான தகவல்கள் பரவுவதாகவும், ஆதாரங்கள் இன்றி பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும், பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு வேண்டப்படுவதுடன், இவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவசரகால சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவல்களை, இராணுவ ஊடகப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ் பி ருவன் குணசேகர அவர்கள் தெரிவித்துள்ளார்.