பிரதான சந்தேக நபர்கள் கைது

ஏப்ரல் 29, 2019

முஸ்லிம் சமூகம் தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். அதில் 07 பேர் பெண்கள். அதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் இருவர் பெண்களாவர். தெஹிவளை குண்டுவெடிப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஏழு பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். மீதமுள்ள எட்டு சந்தேக நபர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டவர்களாவர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று (ஏப்ரல், 29) இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடக மாநாடு இராணுவ பேச்சாளரும் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் தலைமையில் இன்று மாலை இடம்பெற்றது. இதில் விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன மற்றும் கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் மிக நெருங்கிய தொடர்பு டையவர்களென தெரிவித்து ஆறு பேர் தொடர்பாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது. சந்தேக நபர்களில் மூவர் பெண்களும் ஏனையோர் ஆண்களும் ஆவர். அவர்களுள் சகோதரர்களான மொஹமட் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவரும் கம்பளையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தேடப்பட்டு வந்த மற்றுமொரு சந்தேக நபரான பாத்திமா லத்தீபா மாவனல்லையில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மொஹமட் சாதிக் அப்துல்ஹக் என்பவரின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்துல் காதர் பாத்திமா சாதியா அல்லது சித்தியா எனும் பெயரில் தேடப்பட்டு வந்த பெண் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரென்றும் அவர் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏனைய இரு சந்தேக நபர்களான புலஸ்தீனி ராஜேந்திரன் (சாரா) மற்றும் மொஹமட் காசிம் மொஹமட் றில்வான் ஆகிய இருவரும் கல்முனை சவளக்கடையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்திருக்க வேண்டுமென பாதுகாப்பு தரப்பு நம்புகின்றபோதும் அதனை உறுதிபடுத்துவதற்காக டி.என்.ஏ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் பயங்கரவாதிகளையும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களையும் அடையாளம் காண்பதற்கும் கைது செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்தவர்கள் பெரும் பங்களிப்புச் செய்துவருவதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். விசேடமாக, சவளக்கடையில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு தொடர்பாக ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு முஸ்லிம்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலே குறித்த பயங்கரவாதக் குழுவைப் பற்றி மிக முக்கியமான தகவலை அதிகாரிகள் பெற்றுக்கொள்வதற்கு எதுவாக அமைந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.