--> -->

இலங்கை விமானப்படை இன்று 70ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

மார்ச் 02, 2021

வான் காவலர்கள் எனும் மகுட வாசகத்தை கொண்ட இலங்கை விமானப்படை தனது 70ம் ஆண்டு நிறைவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இன்றையதினம் கொண்டாடுகிறது.

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவையொட்டி விமான மரியாதை அணி வகுப்பு, வான் சாகச காட்சிகள் என்பவற்றுடன் 5வது பைட்டர் மற்றும் 6வது ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன் பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1951 மார்ச் 2ம் திகதி ரோயல் சிலோன் விமானப்படை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விமானப்படை, 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறியபோது இலங்கை விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 70 ஆண்டுகளில் 17 தளபதிகளால் கட்டளை வழங்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை, எதிர்காலத்தின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளவும், இலங்கையின் 'வான் பாதுகாவலர்களாக' பணியாற்றவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

இலங்கை விமானப்படையின் செயல்பாடுகள், படை நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளிடமிருந்து பல அச்சுறுத்தல்களை குறைக்க வழிவகுத்தது. போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் விடியலுக்கு விமானப்படையினர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.

தற்போது, விமானப்படையினர் அவர்களின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பல்வேறு தேச கட்டுமான திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்துள்ள பிரமாண்டமான வான் சாகச கண்காட்சியில் கலந்து கொள்ளவென மொத்தம் 23 இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் இந்திய கடற்படையினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

சாரங் ஹெலிகொப்டர் காட்சி குழு, சூரிய கிரண் காட்சி அணி, தேஜாஸ் போர் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் ஆகிய விமானங்களின் வான் சாக காட்சி, காலி முகத்திடல் வான் பரப்பில் நிகழ்த்தப்படவுள்ளன.

இந்த நிலையில், இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்களில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை பங்கேற்பதானது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை பறைசாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.