--> -->

'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவை 50 மில்லியன் ரூபா நன்கொடை

மார்ச் 03, 2021

'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவையினால் 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ரூபா 50 மில்லியன் பெறுமதியான காசோலை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

காசோலையை கையளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) கலந்துகொண்டார்.

நேற்றைய நன்கொடையானது, 75 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க மதிப்பிடப்பட்டுள்ள 'யாத்ரிகர் ஓய்வு' மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வழங்கப்பட்டது.

'யாத்ரிகர் ஓய்வு' மண்டப நிர்மாண பணிகளுக்கு தேவையான எஞ்சிய 25 மில்லியன் ரூபா சுதத் தென்னக்கோனினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

புனித வழிபாட்டு தலத்தின் புனித ஸ்தலமான தூபி மறுசீரமைப்புடன் முழுமையான 'யாத்ரீக ஓய்வு' மண்டபம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

"தீகவாபிய நம்பிக்கை நிதியத்தின்" அங்குரார்பண வைபவம், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமரும் புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரையில் கடந்த 12ம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னகொட, ஜனாதிபதி செயலணியின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலருமான ஜீவந்தி சேனாநாயக்க, டிவி தெரண தொலைக்காட்சியின் தலைவர் திலித் ஜயவீர, சுரனிமல சேனாரத்ன, ஹர்ஷ அலஸ் மற்றும் சுதத் தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.