--> -->

நாட்டினதும் எதிர்கால தலைமுறையினரினதும் நன்மைக்காகவே உயிர் அச்சுறுத்தலை கருத்திற்கொள்ளாது போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்குகின்றேன். – ஜனாதிபதி

ஜூலை 01, 2019

நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்கி வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக கடந்த நான்கு வருட காலமாக நாம் முன்னெடுத்த பாரிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு கடுகளவேனும் உதவாதவர்கள் இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை குற்றவாளியாக நாட்டுக்கு காட்டுவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள மூன்று இலட்சம் இளைஞர்களை பாதுகாப்பதற்கும் அக்குடும்பங்களை கவலையிலிருந்து விடுவிப்பதற்கும் அதிகாரம் இருந்தபோதும் எதிர்க்கட்சியில் இருந்த போதும் அவர்கள் செய்த பணி என்னவென்று தான் அவர்கள் அனைவரிடமும் கேட்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (01) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மேல் மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசத்தினதும் எதிர்கால தலைமுறையினதும் நன்மைக்காகவே உயிர் அச்சுறுத்தலையும் கவனத்திற்கொள்ளாது போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கி வருவதாக  ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

தேசத்தை அழிவுக்குள்ளாக்கக்கூடிய இலகுவான விடயம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இலங்கை தாய் நாட்டை மற்றுமொரு மெக்சிக்கோவாக மாற்றுவதற்கு இடமளிக்காது போதையிலிருந்து விடுபட்ட நாடு என்ற எண்ணக்கருவை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் சில சர்வதேச அமைப்புக்கள் இன்று இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன எனினும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சர்வதேச அமைப்புக்களின் உதவி அவசியம் என்றாலும் நாட்டின் அபிவிருத்தியில் தலையிடுவதற்கோ அல்லது அதன் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் இரகசியமானதல்ல என்றும் போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை அரசியல்வாதிகள் தமது பொறுப்பை நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புக்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கிய ஜனாதிபதி அவர்கள், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புக்கும் சம்பந்தமிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை பேதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணியும் தேசிய அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையும் இலங்கை பொலிசாரும் இணைந்து தயாரித்துள்ள போதைப்பொருள் பாவனை பரவல் தொடர்பான தேசிய ஆய்வறிக்கை இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதுவரை எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத பணிகளை மேற்கொண்டு போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து தேசத்தை விடுவிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்டுவரும் பணிகள் மகாசங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.

மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள், சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறைக்கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களை சேர்ந்தவர்கள், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தின் தரப்பினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.