--> -->

உன்னத பௌத்த போதனையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

மார்ச் 18, 2019

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவுக்கு முன்னர் “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் நாட்டினுள் பௌத்த புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு திரிபீடகம் தொடர்பிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குமேயாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உன்னத பௌத்த போதனையை பல்வேறு விதமாக விபரிப்பதற்கு சில பிரிவினர் முயற்சித்து கொண்டிருப்பதாகவும் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது தனக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் ஜனாதிபதி என்ற வகையிலும் பௌத்தன் என்ற வகையிலும் பெளத்த போதனையின் பாதுகாப்பையும் அதன் எதிர்கால பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு தனது கடமையை சரிவர ஆற்றுவதாகவும் தெரிவித்தார்.

இன்று (17) பிற்பகல் குளியாப்பிட்டிய, நெவகட, உடுபத்தாவ செல்கிரி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்லினாலான புத்த பகவானின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

உடுபத்தாவ பிரதேச செயலக பிரிவில் நெவகட கிராமத்தில் அமைந்துள்ள நெவகட மகாவெவக்கு அருகாமையில் அமைந்துள்ள செல்கிரி விகாரையானது வரலாற்று சிறப்புமிக்க புண்ணியஸ்தலமாகும்.

கருங்கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பகவானின் திருவுருவச் சிலை 56 அடி உயரம் கொண்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த பகவானின் திருவுருவச்சிலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு மலரஞ்சலியும் செலுத்தினார்.

சங்கைக்குரிய ஆலங்குளமே பிறேமசிறி தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்ததுடன், புதிய சிலையின் மாதிரி சிலையொன்றையும் வழங்கினார்.

புதிய சிலையினை நிர்மாணித்த சிற்பியான தேபந்து சீ.டபிள்யு.விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி அவர்கள் நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்தார்.

ராமஞ்ஞ மகாநிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய நாபாண பேமசிறி தேரர், சங்கைக்குரிய ஆலங்குளமே பிரேமசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk