--> -->

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமான நிறைவை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ஜனாதிபதி

ஏப்ரல் 01, 2019

பாரிய உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்ட களத்தில் இறங்கியது எதிர்கால சந்ததியினருக்காக நல்லதோர் தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவே என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதிவண. மெல்கம் கார்டினெல் ரஞ்சித் அருட்தந்தையின் வழிகாட்டலின் கீழ் அனைத்து மதத் தலைவர்களினதும் பங்குபற்றலில் இன்று (31) பிற்பகல் மோதரை, விட்ஸ்வைக் பூங்காவில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலம் முதலே தான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டுக்காக முன்னெடுக்கப்பட்ட அந்த வேலைத்திட்டத்துடன் நாட்டின் சகல மக்களும் அனைத்து தரப்பினர்களும் கைகோர்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” எனும் தொனிப்பொருள் வெகுவிரைவிலேயே யதார்த்தமாகும் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிரான சட்டதிட்டங்களை தற்போது வலுவூட்டியுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கும் திகதி மற்றும் அட்டவணையை தான் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக இன்று முற்பகல் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து மேல் மாகாண கத்தோலிக்க திருச்சபையிலிருந்து எதிர்ப்பு பதாதைகளை ஏந்தி அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இன்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார், கிரேன்பாஸ் புனித ஜோசப், வத்தளை புனித மரியா ஆகிய திருச்சபைகளிலிருந்து வருகைதந்த எதிர்ப்பு ஊர்வலங்கள் மோதரை விட்ஸ்வைக் பூங்காவில் ஒன்றுதிரண்டதுடன், அங்கு சிறப்பு தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றது.

அதிவண. மெல்கம் கார்டினெல் ரஞ்சித் அருட்தந்தையால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

சங்கைக்குரிய கம்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் கத்தோலிக்க அருட்தந்தைகளும் ஏனைய சமய தலைவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk