--> -->

இரண்டு இராணுவ வீரர்களுக்கு வீரோதார விபூஷன விருது

ஆகஸ்ட் 19, 2019

இரண்டு இராணுவ வீரர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வீரோதார விபூஷன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களின் உயிரைக் காக்கும் நடவடிக்கையில் அல்லது பாதுகாப்பு நோக்கத்திற்காக தனது உயிரைப் பணயம் வைத்து தன்னார்வமாக மேற்கொள்ளும் துணிகரமான நடவடிக்கைகளுக்காக இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையில் உள்ள நிரந்தர மற்றும் தன்னார்வ படைப் பிரிவின் அனைத்து பதவிகளிலும் உள்ளவர்களுக்கு முப்படைத் தளபதியினால் இந்த பதக்கம் வழங்கப்படுகின்றது.

2016 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு பயணம் செய்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மட்டக்களப்பு நகரின் பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 4 பேரும் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை பணயம் வைத்து மேற்கொண்ட வீரதீர செயலுக்காக இலங்கை விமானப் படையை சேர்ந்த கோப்ரல் ரத்னாயக்க மற்றும் 2017ம் ஆண்டு மே மாதம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக அனர்த்தத்திற்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் விமானப் படையினர் மேற்கொண்ட விமான மூலமான நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்த அதிகாரி வை.எம்.எஸ்.யாப்பா ரத்னவின் சார்பில் அவரது மனைவிக்கும் ஜனாதிபதி அவர்களால் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி எட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk