--> -->

இலங்கை கடற்படையின் புதிய கப்பல் “பராக்கிரமபாகு” ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

ஆகஸ்ட் 22, 2019

'இலங்கை கடற்படையில் "இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாகு' கௌரவத்துடன் இணைகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து தனக்கான ஆணையதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 22) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது. சீன அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இவ் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ”இலங்கை கடற்படை கப்பல் “பராக்கிரமபாகு” ஆக ஆணையதிகாரம் பெற்று இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டது.
இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து கொண்டார்.
கொழும்பு துறைமுக வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சிவா அவர்களால் வரவேற்கப்படார். அத்துடன் கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி அவர்களால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரியிடம் கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தார்.

பின்னர் சர்வமத ஆசீர்வாதத்துடன் கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் இணைந்து பாதுகாப்பு செயலாளர், கடற்படை தளபதி மற்றும் வருகைதந்திருந்த அதிதிகள் ஆகியோர் “பராக்கிரமபாகு” கப்பலினை சுற்றிப் பார்வையிட்டனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு கப்பலின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தயாரிப்பு தொடர்பாக கடற்படை தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

பீ625 இலக்கம் உடைய இக்கப்பல் 112 மீற்றர் நீளமும், 12.4 மீற்றர் அகலம் ஆகும். மணித்தியாலத்துக்கு 25 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்ட இக்கப்பல், 18 சாதாரண நொட் சஞ்சரிப்பு வேகத்தில் 3500 கடல் மைல்கள் பயணிக்ககூடியது.

1988-1991 ஆம் ஆண்டுகளில் சீன ஹுடோங் ஜாங்வா கப்பல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட போர் கப்பல் வகைகளில் ஒன்றான 053H2G ஜியாங்வே –ஐ (நாடோ) கப்பலாகும். குறித்த கப்பல் 1994ஆம் ஆண்டு பீ 542 இலக்க கப்பலாக ஆணையதிகாரம் அளிக்கப்பட்டு வழங்கப்பட்ட பின்னர் சீன மக்களின் இராணுவ கடற்படை செயற்பாடுகளுக்காக மிகவும் திறமையாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கப்பலை இலங்கைக்கு ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் சீனா ஷாங்காயில் ஒரு பாரிய மறுசீரமைபிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த கப்பல் இராணுவ உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலை இலங்கைக்கு அன்பளிப்பு செய்வதற்கான ஒப்பந்தமானது 2016 ஒக்டோபர் 13ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதுடன், இதனை மறுசீரமைத்து திருத்தங்களை மேற்கொள்ளவதற்காக சுமார் 28 மில்லியன் டொலர் செலவாகியுள்ளது. இதற்கான அன்பளிப்பினை இலங்கை கடற்படையிடம் இவ்வருடம் (2019) ஜூன் 05ஆம் திகதியன்று ஷாங்காய் கடற்படை கப்பல் தளத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மகா சங்க உறுப்பினர்கள், ஏனைய மத தலைவர்கள், சீன தூதுவர் அதிமேதகு திரு. அமைச்சர் மகிந்த சமரசிங்க, இந்திய பாதுகாப்பு செயலாளர்(பாதுகாப்பு உற்பத்திகள்) திரு. செங் சூயுவான், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள், முன்னாள் கடற்படை தளபதிகள், தூதரக அதிகாரிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அதிதிகள் மற்றும் கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.