--> -->

இன்டர்போல் பொதுச் செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஆகஸ்ட் 27, 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் ஜேர்கென் ஸ்டோக் (Jurgen Stock) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே அவர் மேற்படி பாராட்டுக்களை தெரிவித்து விசேட பரிசொன்றினை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிவைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இன்டர்போலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்தமை தொடர்பில் இதன்போது பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவதற்காக வழங்கிய உதவிகளை பாராட்டினார்.

இலங்கை பொலிஸாரும் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் உயர்ந்த தொழில்வாண்மையுடன் செயற்படுவதாகவும் இன்டர்போல் நிபுணர்களுக்கு தேவையான முழுமையான உதவி அவர்களிடமிருந்து கிடைப்பதாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் நிதி தொடர்பான குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக உதவி வழங்குமாறும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது இன்டர்போல் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு முழுமையான உதவிகளை வழங்குவதாக பொதுச் செயலாளர் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தார்.

போதைப்பொருட்களை கண்டறியும் புதிய தொழிநுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தேவையான விசேட அறிவை பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, இன்டர்போல் உதவிப் பணிப்பாளர் கரேல் பெலன் (Karel Pelan) உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk