--> -->

ஆட்கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அவுஸ்திரேலிய தூதுக்குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் சந்திப்பு

செப்டம்பர் 04, 2019

இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை மற்றும் அவுஸ்திரேலிய கூட்டுப் படை தளபதி, மேஜர் ஜெனரல் கிரேய்க் புரினி அவர்கள் தலைமையிலான அவுஸ்திரேலிய அரச தூதுக்குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (செப்டெம்பர், 03) சந்தித்தனர். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் இக்கலந்துரையாடலில் முக்கிய பிரதிநிதியாக கலந்துகொண்டார்.

குறித்த சந்திப்பின்போது, சட்ட விரோத குடியகல்வு மற்றும் ஆட்கடத்தல் தொடர்பாகவும் சட்டவிரோத குடியகல்வு முயற்சிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடிய அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர், சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்தும் தாம் மகிழ்ச்சியடைவாதகவும் குறிப்பிட்டனர்.
அண்மைக் காலங்களில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட அமலாக்க நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாகவும் அவர்கள் இங்கு கலந்துரையாடினர். இவ் வெற்றிகரமான சந்திப்பின் முடிவுகள் குறித்து அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இத் தூதுக்குழுவில், சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான அவுஸ்திரேலிய தூதுவர் திரு. ப்ரைஸ் ஹட்சசன், தேசிய பதில் நடவடிக்கைகள் முகாமையாளரும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ், கட்டளைத் தளபதியுமான ஜேசன் வில்லியம், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர், திருமதி. விக்டோரியா கோக்லி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இக்கலந்துரையாடலில், இலங்கை கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி, பிரிகேடியர் டீஎம்ஏபீ திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.