--> -->

ஜனாதிபதியின் தலையீட்டில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உயிரோடுள்ள வரை சம்பளம்

செப்டம்பர் 27, 2019

யுத்த சூழ்நிலை காரணமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் உயிரோடுள்ள வரை சம்பளம் வழங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கவீனமுற்ற முப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் சகல உறுப்பினர்களுக்கும் ஓய்வுபெற்றதன் பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமமான தொகையினை அவர்கள் உயிரோடுள்ள வரை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கையாக அமைந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்ததுடன், உரிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கமைவாக இன்று முதல் குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த அமைச்சரவை பத்திரத்தினூடாக இந்த சம்பளக் கொடுப்பனவினை பெறுவதற்கு உரிமைக்கோரும் அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் மரணத்தின் பின்னர் அவரது மனைவிக்கும் 26 வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கும் இந்த கொடுப்பனவினை வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும் நிதி அமைச்சின் திருத்தத்திற்கமைய அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் உயிரோடுள்ள வரை மாத்திரமே சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

நன்றி: pmdnews.lk