ஆசிய கடலோர பாதுகாப்புபடை நிறுவன தலைவர்களின் 15 வது உயர்மட்ட சந்திப்பு இன்று கொழும்பில் ஆரம்பம்

ஒக்டோபர் 08, 2019

ஆசிய கடலோர பாதுகாப்புபடைகளின் நிறுவன தலைவர்களுக்கான 15 வது உயர்மட்ட சந்திப்பு இன்று (ஒக்டோபர், 08) கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை கடலோர பாதுகாப்புபடை ஏற்பாடு செய்திருந்த இப்பிராந்திய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இங்கு வருகைதந்த பிரதம அதிதியை   இலங்கை கடலோர பாதுகாப்புபடையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்தா விமலத்துங்க அவர்கள் வரவேற்றார்.

இவ்வருடம் நடைபெறும் இம்மாநாட்டில் அதிக எண்ணிக்கையிலான கடலோர பாதுகாப்புபடைகளின் பிரதானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்கின்றனர். இம்மாநாடு அவுஸ்திரேலியா, பஹ்ரைன், பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, மாலைதீவு, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, துருக்கி, வியட்நாம் மற்றும் அதன்னுடன் இணைந்த உறுப்பு நிறுவனங்களான ReCAAP தகவல் பகிர்வு மையம் (ISC) மற்றும் மூன்று பார்வையாளர் அமைப்புக்களான பாலி செயல்முறை, பிரான்ஸ் மற்றும் UNODC ஆகியன உட்பட அதன் இருபத்திரண்டு உறுப்புநாடுகள் பங்கேற்கின்றன.

ஆசிய கடலோர பாதுகாப்புபடைகளின் நிறுவன தலைவர்களுக்கான இம்மானாடானது, கடலோர பாதுகாப்பு படைகளின் ஒரு உயர்மட்ட பன்முக கலந்துரையாடலாகும். இதனூடாக  ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பானதும்  தூய்மையானதுமான கடல்களை கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் உறுதிப்படுத்துவதாகும்.

இப்பிராந்திய அமைப்பானது 2004 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.  பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற முறைகளில் பிராந்திய கடல்சார் பகுதிகளை அச்சுறுத்தும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் பிராந்திய பங்குதாரர்களிடையே இயங்குதளத்தை மேம்படுத்தும் நோக்கத்த்தில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆசிய கடலோர பாதுகாப்புபடைகளின் நிறுவன தலைவர்களுக்கான இம்மாநாட்டின் மூலம் தேடல் மற்றும் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற நான்கு பிரதான தூண்களைக் கொண்டு காணப்படுவதுடன் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புடன் இப்பிரதான இலக்குகளை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  திறன் மேம்பாடானது கடல்சார் பிரச்சினைகளில் பெருமளவிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளை, சொந்த திறன்களை வலுப்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் இம்மாநாடு உறுதுணையாக அமையும்.

இம்மாநாட்டில், மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு அனுராத விஜேகோன், கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, சிரேஷ்ட கடற்படை மற்றும் கடலோர காவற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த மாநாடு எதிர்வரும் (ஒக்டோபர்) 10ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.