--> -->

சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பணிப்பு

ஜனவரி 16, 2020

இலங்கையின் நான்காவது உயர்ந்த  தாது கோபுரமான சந்தஹிரு சேய  தூபியின் எஞ்சியுள்ள நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்த்தப்பட்ட பாதுகாப்பு படை அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பணித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி,16) இடம்பெற்ற சந்தஹிரு சேய  நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு பணிப்புரை வழங்கினார். மேலும் இந்த நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள  அனைத்து பங்குதாரர்களும் திட்டமிடப்பட்ட காலவரையறைக்குள் இத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான தங்களது முழுமையான பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தாது கோபுரத்தின்  சதுர அறையை அமைப்பதற்கான முறைகள், சதுர அறைக்கு மேல் புனித வளையங்களை ஒன்றிணைத்தல், புனித வளையங்களை சுட்டும் நுனியில் புனித நகைகளை பதித்தல், முன்மொழியப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் வேலைப்பாடுகள், சிற்பம் மற்றும் கலைப் பணிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அகற்றுவதற்காக பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் ஆற்றிய உன்னத சேவையைப் பாராட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் சந்தாஹிரு சேய நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த கோபுரம் கட்டி முடிக்கப்படுமாயின்  இது இலங்கையின் நான்காவது பெரிய தாது கோபுரமாக அமையும். முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையால் மேற்கொள்ளப்படும் மாபெரும் நிர்மானபணியான இது  285 அடி உயமும் 255 அடி அகலமும் கொண்டது.

இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட  விரிவுரையாளர் பேராசிரியர் ரஞ்சித் லியனகே, முப்படை அதிகாரிகள், செயற்திட்ட அதிகாரிகள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.