--> -->

இணைய குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசினால் புதிய சட்ட மூலம்

ஜனவரி 22, 2020
  • சட்ட வரைஞரினால் உத்தேச இணையவெளி பாதுகாப்புச் சட்டம் இறுதிக்கட்டத்தில்  

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதனை தடுப்பதற்கு  புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன்  சமூக ஊடகங்கள் வாயிலாக  வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான   இன,மத ரீதியாக அமைந்த  பதிவுகளை  உடனடியாக அகற்றும் பொறிமுறையையும் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இணைய வழி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய இணையவெளி பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள   புதிய சட்ட வரைவானது  விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

இணையவெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நிகழ்வுகளை திறம்பட நிர்வகித்தல் மற்றும் முக்கிய தகவல் உட்கட்டமைப்பை பாதுகாத்தல் போன்ற விரிவான கட்டமைப்பை நிறுவும் உத்தேச இணையவெளி  பாதுகாப்புச் சட்ட நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன,   இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இணைய பாதுகாப்பு தொடர்பாக,  இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுஉறுப்பினர்கள் மற்றும்  பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையிலான  சந்திப்பு பண்டாநாயக்க ஞாபகார்த்த  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இறுதி சட்ட தெளிவுபடுத்தல்களுக்காக  சட்ட வரைஞரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மேற்படி குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இணைய குற்றங்களில், கடனட்டை மோசடி, பழிவாங்குதல், ஆபாசம், சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், ஹேக்கிங் மற்றும் புலமைச் சொத்து திருட்டு போன்ற தனிநபர்களுக்கு எதிரான குற்றங்களும் இணையவெளி  பயங்கரவாதம், இணையத் தளங்களை ஹேக் செய்தல், அங்கீகாரமற்ற  தகவல்களை செயலாக்குதல் மற்றும் முக்கியமான நிதி தரவை ஹேக் செய்தல் போன்ற அரசாங்கத்திற்கும்  பிற அமைப்புகளுக்கும் எதிரான குற்றங்கள்  அடங்கும்.

பிரபலமான சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வெறுப்புணர்வு பேச்சு பரவாமல் தடுக்க புதிய வழிமுறையை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மேற்படி  கலந்துரையாடலின்போது மேஜர் ஜெனரல் குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவானது,  இணையவெளி பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் தேசிய அளவிலான மையப் புள்ளியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும்.

புதிதாக தயாரிக்கப்பட்டுவரும்  பொறிமுறையின் கீழ், நாட்டில் உள்ள இணைய பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் ஒரு உச்ச அமைப்பாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (டிஐபிஏ) அமைக்கப்படவுள்ளது. அத்துடன் தேசிய தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு மூலோபாய அமுல்படுத்தலின் முக்கியத்துவத்தை  டிஜிட்டல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் கட்டாயப்படுத்தியுள்ளது

இலங்கையில் முறையான சட்ட மற்றும் கண்காணிப்பு முறைமை இல்லாததால் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்கள்) வேகமாக அதிகரித்து வருவதாகவும் அதனால்  அந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த  முடியாதுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினர்  பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலில் தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் மேலதிக செயலாளர் வருண தனபால, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தலைமை நிர்வாக அதிகாரி லால் டயஸ், இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு கொள்கை பணிப்பாளர் கலாநிதி  கனிஷ்க கருணாசேன, செயல்பாட்டுத் தலைவர் ரோஹன பல்லியகுரு மற்றும் குழு உறுப்பினர் மனோரி உனம்புவ ஆகியோர் கலந்து கொண்டனர்.