--> -->

போர் வீரர்களுக்கான முதலாவது நடமாடும் சேவை பாதுகாப்பு அமைச்சினால் களுத்துறையில் ஆரம்பித்து வைப்பு

மார்ச் 08, 2020

போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்களை பேண அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், இதற்காக  புதிய அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக தற்போதுள்ள சட்டமூலங்களை அரசு  மீளாய்வு செய்யும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

முதலாவது  "போர் வீரர்களுக்கான நடமாடும் சேவை"  இம்மாதம் ஏழாம் திகதி களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நடமாடும்  சேவையை ஆரம்பித்து வைத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, போர் வீரர்களின் நலனுக்காக, அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சினது முன்முயற்சியுடன்   ரணவிரு சேவா அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள  போர் வீரர்களுக்கான நடமாடும் சேவையானது,  போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புடைய நிர்வாக மற்றும் நலன்புரி பிரச்சினைகளை தீர்ப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

"படைகளைச் சேர்ந்த எமது வீர, வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் பற்றுறுதி கொண்டிருக்கிறோம், அவற்றை பெற்றுக்கொடுப்பதற்காக உறுதிபூண்டுள்ளோம்," என இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

தற்போதைய  ஓய்வூதிய கொடுப்பனவு  மற்றும் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத் தொகைகள், விதவைகள் மற்றும் குடும்பங்கள் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக முந்தைய திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலான புதிய அமைச்சரவை பத்திரம்  ஒன்று தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர் "எமது யுத்த வீரர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம், அவ்வாறு செய்வதாக நாங்கள் வாக்குறுதி  அளித்துள்ளோம், நாம் தெரிவித்தவாறு செயற்படுவோம் என தெரிவித்தார்.

போர் வீரர்கள் மற்றும் விதவைகளின் ஒரு குழுவினரால் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், இந்த சமூகம், போர் வீரர்களை மிகுந்த மரியாதையுடன் உற்றுநோக்குகிறது, எனவே அவர்கள், மக்களிடம் மரியாதையையும் கெளரவத்தையும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில்  தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது அவர்களது பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

"நாம் மற்றவர்களின் அரசியல் சாதனங்களாக செயற்படக்கூடாது, அவ்வாறு செயற்படும்போது போர்வீரர்களாக நாம் சம்பாதித்த மரியாதையை இழந்துவிடுவோம். வீட்டு வாசலிலே தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் எங்களுக்கான  திட்டங்கள் இருக்கும்போது  கொழுந்துவிட்டு எரியும் வெயிலில் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்வற்கான எந்தவிதமான காரணமும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்

"போர் வீரர்களுக்கான நடமாடும் சேவை"   போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிர்வாக மற்றும் நலன்புரி பிரச்சினைகளுக்கான நிலைபேறான மற்றும் உடனடியான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு செயலாளரின் கருத்திட்டத்திற்கமைய செயற்படுத்தப்படுகின்றது.  

இந்த நிகழ்வில், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜெனரல் (ஒய்வு) நந்தன சேனாதீர, முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.