--> -->

கொரோனாவை இல்லாதொழிக்க இராணுவ வைத்திய குழுக்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகள் பாராட்டத்தக்கது - பாதுகாப்பு செயலாளர்

மார்ச் 14, 2020

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முப்படை மருத்துவக் குழுக்கள் அச்சமின்றியும் மிகுந்த அர்ப்பணிப்புடனும்  செயற்படுவதை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன, எமது நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது பாதுகாப்பு படையினர் முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இராணுவ மருத்துவ படைப்பிரிவினர் யுத்த நிலைமைகளின் போது  மாத்திரமல்லாது உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ அனர்த்த நிவாரண மற்றும் மனிதாபிமாண நடவடிக்கைகளிலும் முன்னின்று உதவிகளை செய்பவர்களாக காணப்படுவதுடன், அது தரைமார்க்கமாகவோ, ஆகாயமார்க்கமாகவோ அல்லது கடல்மார்க்கமாகவோ இருந்தாலும் கூட  அவர்கள் மருத்துவ சேவையில் ஈடுபடுவது அவர்களுக்கு மேலும் மன உறுதியை அதிகரிக்கும் சேவையாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

நேற்று (13) இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 4 ஆவது வருடாந்த  கல்வி அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் எமது நாட்டில் இவ்வாறான அர்ப்பணிப்புள்ள மருத்துவ குழுக்கள் இருப்பதையிட்டு நாம் பெருமைகொள்ள வேண்டும் என்பதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன இதன் போது தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அமைதிகாப்புப்பணி நடவடிக்கைகளில் இலங்கை படை வீரர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய குணரத்ன, 30 வருட  யுத்த காலங்களின் போது காயமடைந்த போராளிகளுக்கும் படைவீரர்களுக்கும் முப்படைகளின் மருத்துவ குழுக்கள் பொதுப்படையான சேவையை வழங்கியதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

'சிறந்த இராணுவ சுகாதாரசேவையை நோக்கி” எனும் தொனிப்பொருளில் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியினால் 4 ஆவது முறையாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது உலகெங்கிலும் உள்ள இராணுவ மருத்துவ துறை நிபுணர்களின் அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் கலந்தாலோசிக்கவும் ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இந்த கல்விசார் அமர்வுகள் இராணுவ மருத்துவத்துறையின் நிபுணத்துவ தரத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதை தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்த அவர்,  நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் இராணுவ சமூகத்திற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதை உறுதி செய்வது இதன் பிரதான நோக்கம்  என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் குணரத்தன, இராணுவ மருத்துவ சர்வதேசக் குழுவின் பொதுச்செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கீர்ட் லெயரினால் இலங்கை இராணுவ மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சேவைகளை பாராட்டி தனது விஷேட உரையின்போது நன்றி தெரிவித்தார்.

"நீண்டகாலமாக பழங்குடியினரும் தேசங்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த வேளையில், இராணுவ விஷேட வைத்தியர்கள் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்காக சிகிச்சைகளை செய்துவந்ததாகவும்,. சில சமயங்களில் அவர்கள், போர் மற்றும் ஏனைய அனர்த்தங்களின் போது படையினரையும் அவர்களின் உயிரையும் காப்பாற்றும் வகையில் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்த வரலாறுகளை இராணுவ மருத்துவ வரலாற்றில் அறிந்திருப்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், விஷேட மருத்துவர் ஆலோசகர், வைத்தியர் அனுலா விஜேசுந்தர, இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக ஆரம்ப பேராசிரியர் மற்றும் இலங்கை விஷேட மருத்துவர்கள் கல்லூரியின் முன்னால் தலைவர் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான  லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கலா டயஸ்,  இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும் அறுவை சிகிச்சை நிபுணருமான ரியர் அட்மிரல் சேன ரூப ஜெயவர்தன, உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.