--> -->

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோருகிறது

மார்ச் 17, 2020
  • கொரோனா வைரஸ் தாக்கத்தை  தணிக்க அரசாங்கத்தினால் தேசிய செயல்பாட்டு மையம்  ஆரம்பித்து வைப்பு
  • மார்ச் 1ம் திகதி  முதல் 9ம் திகதி  வரை இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து வருகை தந்தவர்கள்  சுயமாக  தனிமைப்படுத்தலுக்கு    உட்படுத்தப்பட வேண்டும்
  • பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பயணிகள் வருகை மார்ச் 18 நள்ளிரவு முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து மார்ச்  முதலாம்  திகதி  முதல் ஒன்பதாம்  திகதி  வரை நாடு திரும்பிய பயணிகள், கொரோனா வைரஸ் (COVID-19) பரவாமல் இருக்க தங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என  அரசாங்கம்  இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மார்ச்  முதலாம்  திகதி  முதல் ஒன்பதாம்  திகதி  வரை நாடு திரும்பி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத  1,500 பயணிகளில்  சுமார்  800 பேர் புத்தளம்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க மிக விரைவாக  தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப்படவேண்டிய  ஒரு குழுவாக அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

'கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக  மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமான அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையில்  2,250 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்படும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்' என   இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.  கொரோனா வைரஸ் பரவல்  தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ராஜகிரியவில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில்  இன்று இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இம்மையத்தின்  தலைமை அதிகாரியான இராணுவத் தளபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்படல் செயல்முறைக்கு உட்படுத்தப்படாதவர்கள் தமது வீடுகளில் தம்மை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனும் செயல்முறையை  அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது, இது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும் என அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்ட பின்னர் உள்நாட்டில் தனிமைப்படுத்தப்படல் செயல்முறைக்கு உட்படுத்தப்படாத மற்றும்   வைரஸ் தொற்று எற்பட்டதனை மறைத்த நபர்களே எஞ்சியிருப்பர்.  குறித்த நபர்களின்  இருப்பிடத்தை அடையாளம் தேடிக் கண்டறியும்  நடவடிக்கை  பொலிஸாரினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மார்ச்  மாதம்  நாடு திரும்பிய புத்தளம்  மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் ,அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை  கடைப்பிடிக்காவிட்டால், அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலைமையினை  கட்டுப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசாங்கம் தயங்காது என அவர் மேலும்  தெரிவித்தார்.

வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள்,  அரசின் முடிவுகள் மற்றும்  இதனுடன் சம்பந்தப்பட்ட  தரப்பினர் அனைத்தையும்  ஒரே கூரையின் ஒன்றிணைத்து செயல்பாட்டு மையத்தின் மூலம் பரவலாக்கப்படவுள்ளது.

'இந்த தேசிய முயற்சிக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறும், சுகாதார அமைச்சினால் ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் நாம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்', என லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

நாடு  முழுவதையும் முடக்குவது தொடர்பாக  அரசின் தீர்மானம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள  தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  உலக சுகாதார ஸ்தாபனம்  (WHO) உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின்  பாராட்டுகளைப் பெற்றுள்ளன என அவர் தெரிவித்தார்.

'நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதில்  ஒரு இராணுவ அதிகாரி உள்ளடங்கியிருகின்றார்.  அவர் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் ' எனவும் அவர் தெரிவித்தார்.

புதிதாக தொற்றுக்குள்ளான ஆறு நாபர்களில் தொற்றுக்குள்ளான நபரின் மனைவி ஒருவரும், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்த இரண்டு நபர்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

'களனி மற்றும் மாரவில பகுதிகளில் இருந்து மேலும் இரண்டு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்'  எனவும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய உடுகம்பொல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளத்த பிரதி பொலிஸ்  மா அதிபர் அஜித் ரோஹண, சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான வதந்திகளை பரப்பிய மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

'கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் அந்த தனிநபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும்  40 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே இதேபோன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான  சூழ்நிலையில் பொது மக்களுக்காக  சுகாதார மற்றும் பிற சேவைகள் ஒன்றிணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில்  தேசிய செயல்பாட்டு மையமானது  தடுப்பு மற்றும் முகாமைத்துவ  நடவடிக்கைகளை  ஒருங்கிணைக்கவுள்ளது.

மார்ச் 1ம் திகதி  முதல் 15ம் திகதி  வரை இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பொலிஸ் நிலையங்களில்  பதிவு செய்ய பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே  சம்பந்தப்பட்ட நபர்கள்  0112 444480, 0112 444481, 0115 978720, 0115 978730, 0115 978734 எனும் அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும்   lahd@police.lk எனும் மின்னஞ்சல் முகவரியினூடாகவும்  தகவல்களை அளிக்கமுடியும்.