--> -->

லைபீரிய சரக்குக் கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

பெப்ரவரி 03, 2021

கடற்பாறைகளில் மோதி மோதி தத்தளித்த

ஸாதிக் ஷிஹான்

The Sri Lankan mine detection dogs got the award for the World’s Best Mine Detection Team from the Marshall Legacy Institute in Virginia, USA.

விபத்துக்குள்ளான லைபீரிய கப்பல்

இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் அதன் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கரை மற்றும் ஆழக் கடற்பரப்பில் ஏற்படும் அனர்த்தங்களுக்கு உதவுதலும் இங்கு காணப்படும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் கடற்படையின் பிரதான கடமைகளில் ஒன்றாகும்.

போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், கடல்வழியை பயன்படுத்தி நாட்டிற்குள் ஊடுருவதையும் கடல் பிராந்தியத்திற்குள் அத்துமீறுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் தொடர் ரோந்து கடமைகளில் ஈடுபட்டு வரும் எமது இலங்கை கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினர் அவ்வப்போது கடல்சார் மீட்பு பணிகளை மனிதாபிமான அடிப்படையில் வெற்றிகரமாக மேற்கொண்டுவருகின்றமை அனைவரும் அறிந்த விடயமே.

இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ளதால் கடல்சார் நடவடிக்கை மிக முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. உலகின் அதிகமான வர்த்தக கப்பல்கள் எமது பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. எமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் இந்த கப்பல்களை பாதுகாப்பதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் எமது கடற்படையைச் சார்ந்ததாகும்.

எமது கடற் பிராந்தியத்திற்குள் வரும் எந்தவொரு கப்பலாக இருந்தாலும் அதன் பாதுகாப்பை உறுதிபடுத்துவதும் அனர்த்தங்கள் விபத்துக்கள் ஏற்படும்போது அதிலிருந்து பாதுகாப்பாக மீட்பதும் கடற்படையின் தலையாய கடமையாகும்.

அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் பல மீட்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொண்ட பனாமா நாட்டு கொடியுடன் வந்த நியு டயமன் என்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட கோரத் தீயை பல நாள் போராட்டத்திற்கு பிறகு அணைத்து அதிலிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்த நடவடிக்கை இலங்கை கடற்படையின் மகுடத்தில் ஒரு மயிலிறகாக அமைந்தது. இந்நிலையில் இவ்வாண்டின் முதலாவது மீட்பு நடவடிக்கையாக 2021 ஜனவரி மாதம 23ஆம் திகதி முதல் சுமார் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எம்.வி. யூரோசன் கப்பலின் மீட்பு நடவடிக்கை பதிவாகியுள்ளது.

கிரீஸ் நாட்டு உரிமையாளரைக் கொண்ட லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட எம்.வி. யூரோசன் (MV Eurosun) என்ற வர்த்தக கப்பல் 2021 ஜனவரி 8ஆம் திகதி சீமந்து ஏற்றிக்கொண்டு அபுதாபி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த நிலையில் 2021 ஜனவரி 23ஆம் திகதி ஹம்பந்தோட்டை, சின்ன இராவணா வெளிச்ச வீட்டிற்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து கடற் பாறையுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேற்படி வர்த்தக கப்பலின் இலங்கை முகவர் நிலையமும், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய மும் (Maritime Rescue Coordination Centre) 2021 ஜனவரி 23ஆம் திகதி காலை 11.00 மணியளவில் இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இலங்கையின் தென்கிழக்கு கடற் பிரதேசத்தின் 5.5 கடல் மைல் தொலைவில் அதாவது தென்கிழக்கு கடலிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை உறுதிச் செய்த இலங்கை கடற்படையினர் உடனே மேற்படி கப்பலை பாதுகாக்கும் மற்றும் அதிலுள்ளவர்களை மீட்டெடுக்கும் பணிகளை ஆரம்பித்தனர்.

ஆரம்ப கட்டமாக இந்த விபத்து தொடர்பில் தமக்கு கிடைக்கப் பெற்ற தகவலை இலங்கை விமானப் படையுடன் பகிர்ந்து கொண்ட கடற்படை, விமானப் படையின் உதவியை நாடியுள்ளது. உடனடியாக செயற்பட்ட விமானப் படை தன்னிடமுள்ள கண்காணிக்கும் விமானத்தை அனுப்பி தாழ்வாக பறந்த நிலையில் அந்த கப்பலை வானிலிருந்தவாரே கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான புகைப்படங்களை எடுத்துள்ளது. விமானப் படை ஊடாக பெற்றுக் கொண்ட புகைப்படங்களுக்கமைய கடற்படை தமது உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது.

இதற்கமைய உடனடியாக செயற்பட்ட இலங்கை கடற்படையினர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கடற்படையின் ஏழு சுழியோடிகள் உள்ளடங்களாக 47 பேர் கொண்ட கடற்படை வீரர்களுடன் காலி கடற்படைத் தளத்திலிருந்து ரத்னதீப என்ற கப்பல் புறப்பட்டது. ஹம்பந்தோட்டை தளத்திலிருந்து இலங்கை கடற்படையின் அதிவேக ‘டோரா’வும் சீறிப்பாய்ந்தது.

இவ்விரண்டு கப்பல்களும் விபத்துக்குள்ளான கப்பல் இருந்த இடத்தைச் சுமார் ஆறுமணியளவில் சென்றடைந்தன.

இலங்கை கடற்படை கப்பல் மற்றும் படகு ஆழ்கடலைச் சென்றடைந்த போதிலும் இரவு நேரம் என்பதால் குறித்த கடற்பிரதேசம் எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. உடனடியாக சுழியோட முடியாமையினால் அங்கு சென்ற சுழியோடிகள் அடுத்த நாள் அதிகாலை வளர காத்திருந்தனர். அதேசமயம் விபத்துக்குள்ளான லைபீரியா கப்பலுடன் அதன் பாதிப்பின் நிலைமை மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் இரவு முழுவதும் தொடர்ந்தும் தொடர்பை பேணி வந்துள்ளனர்.

லைபீரியா நாட்டு கொடியுடன் 33 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீமந்து ஏற்றிய நிலையில் வந்திருந்த கப்பல் 180 மீட்டர் நீளமானது. இந்த கப்பலில் 720 மெற்றிக் தொன் எரிபொருளும் இருந்தது. மேற்படி கப்பலில் கெப்டன் உட்பட 18 பேர் இருந்தனர். இவர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமி 15பேர். எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர் மூவர்.

கப்பல் மற்றும் அதில் உள்ளவர்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்ற நிலையில் இரண்டாம் நாளான 24ஆம் திகதி அதிகாலை தொடக்கம் இலங்கை கடற்படை வீரர்கள் செயற்பட தொடங்கினர்.

விபத்துக்குள்ளான கப்பலுக்கு எவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஆராயும் பொருட்டு கடற்படை சுழியோடிகள் கடல் ஆழத்துக்குச் சென்றனர். கப்பலின் இன்ஜின் மற்றும் விசிறி பொருத்தப்பட்ட 70 மீட்டர் அளவிலான பகுதி கடலுக்கடியிலுள்ள கற்பாறை மற்றும் மண்மேட்டில் சிக்கியுள்ளதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கப்பலை கற்பாறையிலிருந்து அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கினர். இது சுலபமான வேலை அல்ல. இழுவை படகுகளை வரவழைத்து மெதுவாக கப்பலை இழுத்து ஆழ்க் கடல் பக்கமாக செலுத்த வேண்டும். கேட்பதற்கு இலகு போலத் தோன்றினாலும் நடைமுறையில் கஷ்டங்கள் நிறைந்த ஒரு செயல். இது பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கடலுக்கடியில் பாரிய அலை மோதல்கள் திடீரென ஏற்பட்டதால் இதன் விளைவாக சிக்கிய மண்மேட்டிலிருந்து கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர தொடங்கிளது. அலைமோதலினால் இயற்கையாக கப்பல் நகர தொடங்கியமையானது கடற்படையின் மீட்பு நடவடிக்கையை மேலும் இலகுபடுத்துவதாக அமைந்தது.

கடந்த 25ஆம் திகதி காலை முதல் தொடர்ந்தும் செயற்பட்ட சுழியோடிகள் கப்பலின் சிக்குண்ட பகுதி மற்றும் நங்கூரம் அமைந்த பகுதி என்பன பாதிப்புக்குள்ளாகியுள்ளதா என்பதை முழுமையாக பரிசோதித்து திருப்தி அடைந்தனர்.இந்த விபத்து கப்பலுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புபை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலாக அமைந்தது.

இதற்கிடையில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏதும் ஏற்பட்டால் அதை நிறுத்தவும் தேவைப்படும் பட்சத்தில் முகாமைத்துவம் செய்யவும் தேவையான உபகரணங்களுடன் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ‘சமுத்ர ஆரக்ஷா’ என்ற கப்பலும், எண்ணெய் கசிவு தொடர்பில் பிரத்தியேகமாக ஆராயும் பொருட்டு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஐந்து அதிகாரிகள் அடங்கிய (Marine Environment Protection Authority - MEPA) ஆய்வுக் குழுவுடன் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ‘சமாரக்ஷா’ கப்பலும் விபத்துக்குள்ளான கடல் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை, இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் ஹம்பந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்திற்கு (Hambanthota International Port Group) சொந்தமான டக்கும் (Tug) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இக் கப்பல் தென்கிழக்கு கடல் பிரதேசத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணிப்பதற்கு ஏற்றநிலையில் உள்ளதா என்பதை ருசுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு கடற்படையின் உதவியுடன் ஜனவரி 28ஆம் திகதி பரிட்சார்த்த ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. 5 கடல் மைல் தூரம் செலுத்தப்பட்டு, விபத்துக்குள்ளான எம்.வி. யூரோசன் கப்பலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் குறித்த கப்பல் தனது பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் எம்.வி. யூரோசன் கப்பல் ஹம்பந்தோட்டை கடற்பரப்பிலிருந்து திருகோணமலையை நோக்கி புறப்பட்டது. நேற்று திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்ததை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக டி சில்வா உறுதி செய்தார்.

The Sri Lankan mine detection dogs got the award for the World’s Best Mine Detection Team from the Marshall Legacy Institute in Virginia, USA.

மீட்பு பணியில் ஈடுப்பட்ட கடற்படை கப்பல்

நன்றி :  http://vaaramanjari.lk