--> -->

நாட்டின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுப்படுத்தப்படுவர்

ஜனவரி 21, 2021
  •  புதிய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர கடமை பொறுப்பேற்பு

நாட்டின் அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர இன்று (ஜன. 21) தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிற்கு தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சேவையாற்ற தேவையான பயிற்சிகளை சிவில் பாதுகாப்பு படையின் நந்தமித்ர படையணிக்கு பயிற்சி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவினால் ஜனவரி 13ஆம் திகதி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர கொழும்பு கொம்பனி வீதியிலுள்ள பாதுகாப்பு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவகத்தில் இன்று (21) காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்க வருகைத் தந்த மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவை அதன் மேலதிக பணிப்பளார் நாயகம் ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க வரவேற்றதுடன் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

சமய அனுஷ்டானங்களை தொடர்ந்து சுபவேளையில் முதல் ஆவணங்களில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றார்.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) வின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா தலைவி திருமதி சித்ரானி குணரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன, இலங்கை துறைமுக அதிகார சபை தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு), அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் பல்துறை அபிவிருத்தி செயலணியின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.