logo

அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு

கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் 2019 நவம்பர் 16 ஆம் திகதி அநுராதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ருவன்வெலிசேய தூபி புனித தலத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவரே இந்த நாட்டில் மிக உயர்ந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட அதுவரை அரசியல் வாழ்வைக் கொண்டிராத முதலாவது அரசியல்வாதியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமாவார். அவர் தன்னையடுத்த மிக நெருங்கிய போட்டியாளரைவிட 1.3 மில்லியன் வாக்குகளை அதிகமாகப் பெற்றதோடு, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 52.25 வீதத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் ஸ்ரீ லங்கா பொதுசனப் பெரமுனக் கட்சியில் போட்டியிட்டார்.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்ஷ அவர்களின் புதல்வரும் இலங்கையின் 5 வது நிறைவேற்று சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ 1949 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். அவர் 1971 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார். தனது இராணுவ சேவையின்போது அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகளில் முதுமானிப் பட்டமொன்றைப் பெற்றதோடு பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயர்தரப் பயிற்சிகள் பெற்றார். யுத்தகாலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆணையிட்டு நடத்தியதால் அவருக்கு யுத்தத்தில் தீரமும் சிறப்பும் காட்டியமைக்கான ரணவிக்ரம பதக்கம் மற்றும் ரணசுர பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டன. யுத்தத்தின்போது காட்டிய வீரத்திற்காக அவர் இலங்கையின் சனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்றார். 1991 இல் ஒரு லெப்டினன் கேர்ணலாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயின்று அதன்பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு கலிபோர்னிய, லொயலா சட்டக் கல்லூரியில் ஒரு தகவல் தொழில்நுட்ப தொழில்வாண்மையாளராகப் பணியாற்றி 2005 இல் இலங்கைக்குத் திரும்பினார்.

2005 நவம்பரில் அவரது சகோதரர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி ஒப்படைக்கப்பட்டது. 1970 களின் நடுப்பகுதியிலிருந்து இந்நாட்டில் செயற்பட்டுவந்த கொடூரமான எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்ததன் மூலம் அவர் இப்பதவியில் நாட்டிற்கு பெரும் சேவையாற்றினார். 2006 டிசெம்பரில் அவர் தனது கடமையில் ஈடுபட்டிருந்தவேளை ஒரு எல்.ரீ.ரீ.ஈ. தற்கொலைக் குண்டுதாரி அவரது காரின் மீது வெடிபொருள் நிரப்பிய வாகனமொன்றை மோதியபோது மயிரிழையில் அப்படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார். இதனால் மனந்தளராது, அவர் ஆயுதப்படைகளுக்கும் பொலிசாருக்கும் மூலோபாயங்களை வகுப்பதிலும் திட்டங்கள் தீட்டுவதிலும் ஒருங்கிணைப்புச் செய்வதிலும், 2009 மே மாதம் எல்.ரீ.ரீ.ஈ. தோற்கடிக்கப்படும்வரை அதனை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையானவற்றை ஆதப் படையினருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்குவதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னர் இவ் வெற்றி நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவந்தது. பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் அவரது வகிபாகத்தின் வாயிலாக அவர் இலங்கைக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவித்து அவருக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் ஒரு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.

யுத்தம் முடிவுற்றதும் கோட்டாபய ராஜபக்ஷ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் துரிதமாக வழமை நிலைமைக்குக் கொண்டுவருவதில் துணையாகவிருந்தார். வடக்கு கிழக்கில் கண்ணி வெடியகற்றல், மீள் நிர்மாணம் மற்றும் மீள் குடியேற்றம் ஆகியவற்றிலும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களின் புனர்வாழ்வு மற்றும் அவர்களை சமூகத்தில் மீள ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலுமான இராணுவத்தின் ஈடுபாட்டை அவர் மேற்பார்வை செய்தார். இராணுவம் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் சமாதானக்கால வகிபாகமொன்றுக்கு மாறிச் செல்வதை மீள்பார்வை செய்த அதேவேளை அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டின் புலனாய்வுப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும் பலவித செயற்பாடுகளையும் முன்னெடுத்தார். அவர் குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவு ஆகியன உள்ளிட்ட தனது அதிகாரவரம்பின்கீழ் வரும் பல்வேறு அரச நிறுவனங்களினுள் கணிசமானளவு திறனைக் கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அமைதி திரும்பி பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் அரசாங்கத்தின் கவனக் குவிப்பு அதிகரித்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நிருவாகப் பிரிவு நகர அபிவிருத்திக்கான பொறுப்பையும் உள்ளடக்கும்வண்ணம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் அவர் நாட்டின் நகர தரைத்தோற்றத்தை மாற்றியமைப்பதற்கு இலட்சியமிக்கதும் விரிவானதும் குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றிகரமானதுமான நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்தார். இலங்கையின் நகர இடப்பரப்புக்களை நீண்ட காலமாக மோசமாக்கிய பல நீண்டகால பிரச்சினைகள் அவரது தலைமைத்துவத்தின்கீழ் திட்டமிட்ட முறையில் கையாளப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டன. வெள்ளக் கட்டுப்பாட்டையும் வடிகால் அமைப்பு முகாமைத்துவத்தையும் வலுப்படுத்துதல், பொருத்தமற்ற குடியிருப்புக்களில் இருந்தவர்களுக்குத் தரமான வீடமைப்புக்களை வழங்குதல், பொதுத் திறந்தவெளிகள் இருப்பதையும் அவற்றின் தரத்தையும் அதிகரித்தல், பாரம்பரிய கட்டிடங்களை மீளமைத்தல், வீதிகள் மற்றும் நடைபாதைகள் ஆகியவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்தல், பொது வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் வினைத்திறன்மிக்க குப்பையகற்றல் ஆகியன இக்காலப்பகுதியில் அவரது பல சாதனைகளுள் சிலவாகும். அவரது பணி தெற்காசியாவிலேயே மிக அழகிய மற்றும் நன்கு முகாமைத்துவம் செய்யப்படும் நகரங்களுள் ஒன்றெனக் கொழும்பு நகரம் பாராட்டப்படும் அளவிற்கு, நாடு பற்றிய அபிப்பிராயங்களை மாற்றியமைப்பதில் பெரிதும் துணையாக இருந்தது. இலங்கையின் நகர இடப்பரப்புகளின் நிலைமாற்றம் அதற்குக் கணிசமான அளவு வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்கு உதவியது.

2015 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் என்ற தனது பதவியை இராஜினாமாச் செய்தார். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ரீ லங்கா பொதுசனப் பெரமுனக் கட்சியின் சார்பில் சனாதிபதி வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு ஆரம்பித்த அவரது முனைப்பான அரசியல் பிரவேசத்திற்கு முன்னர், அவர் நாட்டின் சிறந்ததோர் எதிர்காலத்தின்மீது பற்றுறுதி கொண்ட தொழில்வாண்மையாளர்களை ஒன்றுதிரட்டிய ஒரு அமைப்பான வியத்மக அமைப்பையும் பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர்களது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான ‘எலிய’ அமைப்பையும் நிறுவினார்.

சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அயோமா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு மனோஜ் என்ற ஒரு மகன் உள்ளார்.