--> -->

MOD ALERTS எனும் பெயரில் குறுந்தகவல் சேவை அங்குரார்ப்பணம்

நவம்பர் 13, 2019

நாட்டின் தேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையச்செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சு ‘MOD ALERTS' எனும் புதிய குறுந்தகவல் சேவையினை ஆரம்பித்துள்ளது.

‘MOD ALERTS'  என அறியப்படும் குறுந்தகவல் முறைமையின் ஊடாக, நாட்டில் ஏற்படும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும்  நாடலாவிய அனர்த்தங்கள், தேசிய நலன் குறித்த செய்தி தெளிவுபடுத்தல்கள் என்பவற்றை உள்ளடக்கிய அவசரகால நிலைமைகள் தொடர்பிலான உண்மைச் செய்திகள் ஆகியன அறிவிக்கப்படவுள்ளன.

இப்புதிய குறுந்தகவல் சேவை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால்  இன்றைய தினம்  (நவம்பர், 13) வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் புதிய சேவையானது நீண்டகாலமாக உணரப்பட்ட ஒரு தேவையாகும், இச்சேவையின்  மூலம் பொது மக்கள், உண்மையான தகவல்களை அறிந்துகொள்வதுடன் அநாவசிய பீதி மற்றும் பதட்டத்திற்கு இட்டுச்செல்லும் வதந்திகள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் என்பன பரப்படுவதை தடுப்பதற்கான ஒரு பயனுள்ள கருவியாகவும் அமையும்.

இச்சேவையானது, இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தின்  இறுதியில் பாதுகாப்பு அமைச்சினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட  www.defence.lk உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் மற்றுமொரு சேவையாக காணப்படுகிறது.

இச்சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது, பாதுகாப்பு செயலாளரின்  ஒருங்கிணைப்பு செயலாளரும் ஆலோசகருமான திரு. சுரேன் தயரத்ன அவர்கள் MOD ALERTS' எனும் குறுந்தகவல் சேவையின் நோக்கம் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கிடையிலான ஒத்துழைப்பின் வெளிப்பாடாக  இச்சேவை உருவாக்கம் பெற்றுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனம், டயலொக் புரோட்பேண்ட் வலையமைப்பு (பிரைவட்) லிமிடெட், பாரதி எயார்டெல் லங்கா (பிரைவட்) லிமிடெட், லங்கா பெல் லிமிடெட், டயலொக் எக்ஸியேட்டா பி.எல்.சி, மொபிடெல் (பிரைவட்) லிமிடெட் மற்றும் ஹட்சிசன் தொலைத்தொடர்பு லங்கா (பிரைவட்) லிமிடெட் ஆகிய அனைத்து நிறுவனங்களும் இப்புதிய குறுந்தகவல் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுடன் ஒன்றாக கைகோர்த்துள்ளன.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் அவர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமைகளுக்கு அவர்களால் வழங்கப்பட்ட சேவைகளை பாராட்டியதுடன், நினைவுச்சின்னங்களையும்  வழங்கி வைத்தார்.  

இப் புதிய சேவையானது தேசிய புலனாய்வுத்துறை பிரதானி அலுவலகத்தின் ஆலோசனைகளுக்கேற்ப  பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஊடாக முன்னெடுத்து செல்லப்படும்.

இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சினது ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனெரல் சுமித் அத்தபத்து அவர்கள் தனது நன்றிஉரையில் இத்தேசிய நலன் குறித்த செயற்பாடுகளுக்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் வழங்கிய அனைத்து தலைமைகளுக்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், இப்புதிய சேவையினூடாக பொதுமக்களுக்கு வெற்றிகரமாக தகவல்களை வழங்கமுடியும் எனவும்  நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், தேசிய புலானாய்வுத்துறை பிரதானி, இராணுவ இணைப்பு அதிகாரி, இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சினது ஊடக மையத்தின் பணிப்பாளர், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமைகள், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், முப்படை மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்கள் மற்றும் விஷேட அதிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.