24வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலு​கேதென்ன கடமை ஏற்பு

ஜூலை 15, 2020

இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலு​கேதென்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று நட்சத்திர தரத்தைக் கொண்ட வைஸ் அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைஸ் அட்மிரல் உலுக்கதென்ன இலங்கை கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட முன்னர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பொறுப்பு வகித்தார்.

பெருமை மிகுந்த கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியைத் தொடர்ந்த அவர் 1985ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் 13வது ஆட்சேர்ப்பில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலையில் அடிப்படை பயிற்சிகளை பூர்த்தி செய்து பயிலுனர் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டார்.

கொழும்பில் உள்ள இணைந்த படைச் சேவை கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு கற்கையில் முதுமாணி பட்டப்படிப்பையும் பெற்றுக் கொண்டார்.

அவுஸ்திரேலிய வொல்லொங்கொங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கை வகுப்பு கற்கையில் முதுமாணிப் பட்டத்தையும் இந்தியாவின் மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கையில் தத்துவவியல் முதுமாணி பட்டத்தையும் இவர் பூர்த்தி செய்துள்ளார்.

தனது 35 வருடகால இலங்கை கடற்படையின் நீண்டகால சேவையில் பயிற்சி, நிர்வாகம் மற்றும் நடவடிக்கை தொடர்பான பிரிவுகளில் பல்வேறு கௌரவ நியமனங்களை வகித்துள்ளார்.

அட்மிரல் பியால் டி சில்வா சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வைஸ் அட்மிரல் உலு​கேதென்ன புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.