--> -->

எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கு அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடுகிறது

செப்டம்பர் 04, 2020
  • எண்ணெய் கசிவு இடம்பெறுமானால் அவற்றை முகாமைத்துவம் செய்ய தயாராகவுள்ளதாக அரசு தெரிவிப்பு

எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கும் குறித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு இடம்பெறுமானால் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

எம்ரீ நியூ டயமண்ட் எண்ணெய் தாங்கிக் கப்பல், சங்கமன் கந்த முனையிலிருந்து 22 கடல் மைல் தூரத்தில் 3.1 கி.மீ. ஆழத்தில் நங்கூரமிட்டுள்ளதாக கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் வைஎம். ஜயரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

"நாம் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புடன் இருக்கிறோம், எமது முதல் முன்னுரிமை இந்த கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதாகும். பாதுகாப்பு நடைமுறைக்கு பின்னர் கப்பல் அகற்றும் செயல்முறைக்கு அமைவாக அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

சங்கமன்கந்த முனையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த எம் ரீ நியூ டைமண்ட் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நேற்றைய தினம் திடீரென தீப்பற்றியது.

கப்பலின் இயந்திர அறையில் திடீரென ஏற்பட்ட தீயான கப்பலின் நிர்வாக பிரிவில் பரவியுள்ளது. எனினும் கப்பலின் கச்சா எண்ணெய் களஞ்சிய படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு தீ பரவாத நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக ரியர் அட்மிரல் ஜயரத்ன தெரிவித்தார்.

"குறித்த பிராந்தியத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்படுமாயின் அதனைத் தடுக்கும் வகையில் கடற்படையுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கடலோர பாதுகாப்புப்படை மற்றும் பொலிஸ் போன்ற ஏனைய அமைப்புக்களின் ஒத்துழைப்புடன்  ஒரு துரித திட்டத்தை நாம் உருவாக்கி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.  

இந்த செய்தியாளர் மாநாட்டில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பிரதி பொலிஸ் மா அதிபர் சூலசிரி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ, கப்பல் வர்த்தக பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன, துறைமுக நிர்வாகங்களுக்கு பொறுப்பான கெப்டன் நிர்மல் சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.