இலங்கையில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 13 ஆக பதிவு

செப்டம்பர் 14, 2020

வெளிநாட்டில் இருந்து வருகைதந்த இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக  சிலாபம் தள வைத்தியசாலையில் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த நபர், அண்மையில் பஹ்ரைனில் இருந்து வருகை தந்த 60 வயதுடை நபர்  என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர் இம்மாதம் 9ஆம் திகதி சிலாபம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இதய நோய் காரணமாக இன்றைய தினம் உயிரிழந்ததையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது.

இதேவேளை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3235 அதிகரித்துள்ளதுடன் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3005 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், 217 பேர் வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.